இது மத்திய பட்ஜெட்டா.. இல்லை ஆந்திரா, பீகார் பட்ஜெட்டா.. நாயுடு, நிதிஷ் பிரஷருக்கு பணிந்த மோடி 3.0!
டெல்லி: பீகார், ஆந்திர பிரதேச அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்திய பாஜக அரசு பணிந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் இரண்டு மாநிலங்களுக்கும் முக்கியமான பல திட்டங்களை பாஜக அரசு வெளியிட்டு உள்ளது.
240 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பாஜக பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாகவே உள்ளது. என். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் முறையே 16 மற்றும் 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான நபர்களாக உருவெடுத்து 'கிங்மேக்கர்களாக' உள்ளனர்.

இவர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக ஆட்சியில் நீடிக்க முடியும். இதில் பீகார், ஆந்திர பிரதேசம் இரண்டும் சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதியை கேட்டு உள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று நீங்கள் உத்தரவாதம் அளித்ததால்தான், நாங்கள் கூட்டணி வைத்தோம்.. அந்த ஒரு அறிவிப்பை மனதில் வைத்தே.. நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம். என்று நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த நிலையில், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் பாஜகவுக்கு கடிதம் எழுதி உள்ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான் பீகார், ஆந்திர பிரதேச அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்திய பாஜக அரசு பணிந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் இரண்டு மாநிலங்களுக்கும் முக்கியமான பல திட்டங்களை பாஜக அரசு வெளியிட்டு உள்ளது. இது மத்திய பட்ஜெட்டா.. பீகார், ஆந்திர பிரதேசத்தின் மாநில பட்ஜெட்டா என்று கேட்கும் அளவிற்கு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகாருக்கு இதேபோல் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் என்று இரண்டு மாநிலங்களுக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
முக்கிய அறிவிப்புகள்; இதேபோல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கப்படும்.
அரசின் முன்னெடுப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்படும், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications