சல்லி சல்லியான கட்டமைப்பு.. பாகிஸ்தான் பழைய நிலைக்கு திரும்ப 10 வருடங்கள் ஆகுமாம்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே நிலவி வந்த போர் நிறுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், பாகிஸ்தான் சந்தித்துள்ள சேதாரம் நம்மை விட பல மடங்கு அதிகம். முக்கியமாக பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டமைப்பை உடைந்துவிட்டது. அதை சரி செய்ய அந்நாட்டுக்கு 10 வருடங்கள் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தாக்குதல் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து பாகிஸ்தான் தரப்பில் கடந்த 2 நாட்களாக இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்திய ராணுவமும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. போர் பதற்றம் இரு நாட்டுகளிடையேயும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மாலை இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவுக்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் ஆதரவு எழுந்து வருகிறது. போர் முடிவுக்கு வந்தாலும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக, நம் நாட்டுக்கு சற்று பாதிப்பு ஏற்பட்டாலும் பாகிஸ்தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் தான் பாகிஸ்தான் போர் நிறுத்தம் முடிவுக்கு இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பி.கே சேகல் கூறுகையில், "இந்த போர் நிறுத்தம் இரண்டு நாடுகளுக்குமே நல்ல முடிவு தான். இரண்டு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால் இது மற்றொரு நல்ல தொடக்கமாக இருக்கும்.
இந்தியாவை விட பாகிஸ்தான் பல மடங்கு அதிக சேதங்களை சந்தித்துள்ளது. அந்த மண்ணில் ஊடுருவியிருந்த தீவிரவாதம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. 9 தீவிரவாத முகாம்கள் மொத்தமாக துடைத்து எறியப்பட்டுள்ளது. எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டுவிட்டன. முக்கியமாக அவர்களின் ராணுவ கட்டமைப்பு மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இழந்த ராணுவ கட்டமைப்பை மீண்டும் சரி செய்ய 8-10 வருடங்கள் ஆகும். உறுதியான, தீர்க்கமான தலைமையால் இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் திறம்பட எதிர்கொண்டுள்ளது. கடந்த 11 வருடங்களாக இந்தியா, நம் விமானப்படையை வலிமையாக்க அதிகளவு நிதியை செலவு செய்துள்ளோம். இதன் மூலம் இந்தியா விமானப்படையின் ஆற்றல், திறன் நன்கு மேம்பட்டுள்ளது.
தொடர் நடவடிக்கைகள் காரணமாக இந்திய ராணுவத்தின் முகமே வேறு மாதிரி மாறியுள்ளது. நவீன போரில் வெற்றி பெறுவதற்கான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்." என்றார்.












Click it and Unblock the Notifications