அமித் ஷாவுடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா திடீர் சந்திப்பு!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா இன்று, தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அமித் ஷாவுக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் தற்கொலை செய்துகொண்டு ஒருவர் மரணித்தது, வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காததால் லாரி ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா அமித் ஷாஷாவுக்கு விளக்கமளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய சேவைகள் மற்றும் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அதோடு, ஜம்மு காஷ்மீரில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்கும், அதிக சுற்றுலாப் பயணிகளை காஷ்மீருக்கு கொண்டு வருவதற்கும் தொழில்துறை மற்றும் சுற்றுலாக் கொள்கைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது குறித்தும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, "ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து, பாதுகாப்பு நிலைமை, மார்ச் 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நிர்வாகம் குறித்து விவாதிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒமர் அப்துல்லா, "ஒரு கூட்டம் நடக்கட்டும்.. அதன் பிறகு நான் இதற்கு பதிலளிப்பேன்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்தபோது, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான ஒமர் அப்துல்லா, தனது எக்ஸ் தளத்தில் "உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோல்வியுறச் செய்யுங்கள்." என்று பதிவிட்டிருந்தார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு கூட்டணிகளுக்கு இடையே நிலவும் ஒற்றுமையின்மையை ஒமர் அப்துல்லா வெளிப்படையாகவே சாடியுள்ளார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது என்று ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் முடிவெடுத்ததுமே அதனை விமர்சித்திருந்தார் ஒமர் அப்துல்லா.
முன்னதாக கூட்டணியின் நீண்ட நாள் நோக்கம் குறித்து முன்பு ஒமர் அப்துலா கேள்வி எழுப்பி இருந்தார். "இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் தான் உருவாக்கப்பட்டது என்றால் அதனை முடித்துக்கொள்வது பற்றி முடிவெடுக்கலாம்." என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications