இன்று ஒரே நாளில் ரூ. 1000 கோடி நஷ்டம்.. ஜுன்ஜுன்வாலாவுக்கு விழுந்த அடி.. என்னாச்சு பாருங்க
டெல்லி: டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் இன்று மிகப் பெரியளவில் சரிந்த நிலையில், ரேகா ஜுன்ஜுன்வாலா கொஞ்ச நேரத்தில் சுமார் ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை நஷ்டத்தை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா இருந்த மிக முக்கியமான முதலீட்டாளர் என்றால் அது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை சொல்வார்கள். இவர் பல்வேறு நிறுவனங்களில் வெற்றிகரமாக முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதித்தவர்.

ஜுன்ஜுன்வாலா: இவர் கடந்த 2022இல் மறைந்த நிலையில், இவரது பங்குச்சந்தை முதலீடுகள் இவரது குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள். இதற்கிடையே ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா இன்று ஒரே நாளில் ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை இழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரே நாளில் எப்படி இந்தளவுக்கு அவர் நஷ்டத்தை எதிர்கொண்டார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்திருந்தார். அவரது முதலீடுகளில் முக்கியமானது டைட்டன் நிறுவனம். தொடக்கக் காலத்திலேயே டைட்டன் நிறுவனத்தை அடையாளம் கண்டு, அதில் முதலீடு செய்த ஜுன்ஜுன்வாலா இதன் மூலம் பெரிய லாபம் பெற்றார். இப்போதும் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினரிடம் டைட்டன் நிறுவனத்தின் சுமார் 5% பங்குகள் இருக்கிறது.
டைட்டன்: இந்தச் சூழலில் தான் டைட்டன் நிறுவனத்தின் 4ஆவது காலாண்டு முடிவுகள் இன்று வெளியானது. எதில் எதிர்பார்த்த அளவுக்கு நிறுவனம் லாபம் ஈட்டாத நிலையில், டைட்டனின் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7% வரை சரிந்தன.
ரேகா ஜுன்ஜுன்வாலாவிடம் டைட்டன் நிறுவனத்தின் 5.35 சதவீத பங்குகள் இருக்கும் நிலையில், இதன் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை ₹16,792 கோடியாக இருந்தது. இன்று வர்த்தகம் தொடங்கிய உடன் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியது.
டைட்டனின் சந்தை மதிப்பு வெள்ளியன்று ₹3,13,868 கோடியாக இருந்த நிலையில், அது ₹3 லட்சம் கோடிக்குக் கீழே சரிந்து ₹2,98,815க்கு சென்றது. இந்த வீழ்ச்சி காரணமாக ரேகா ஜுன்ஜுன்வாலாவின் மதிப்பு இன்று ஒரே நாளில் ₹805 கோடி முதல் ரூ.1000 கோடி வரை சரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சரிவு: கடந்த ஆண்டு இதே காலாண்டு உடன் ஒப்பிடும் போது டைட்டன் நிறுவனத்தின் லாபம் 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது ஓரளவுக்கு நல்ல வளர்ச்சி தான். இருப்பினும், இதை விட நல்ல ரிசல்ட்டை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தால் பலரும் டைட்டன் பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்தன. இதனால் டைட்டன் பங்குகள் விலை மளமளவெனச் சரிந்தது.
டைட்டன் வாட்ச் நிறுவனமாகத் தொடங்கப்பட்டாலும் கூட அவர்களின் இப்போதைய முக்கியமான தொழில் என்றால் அது தங்க நகை விற்பனை தான்.. தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் கடும் போட்டி காரணமாக டைட்டனின் லாபம் வரும் காலத்தில் குறையலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதுவே பங்குகள் விலை சரிய முக்கிய காரணமாகும்.
நஷ்டம்: இதன் காரணமாகவே ஜுன்ஜுன்வாலா குடும்பம் சுமார் ரூ.1000 கோடி வரை இழந்துள்ளனர். அதேநேரம் இதை notional loss என்பார்கள். ஏனென்றால் டைட்டன் நிறுவனத்தின் பங்குகளை விற்றால் மட்டுமே ஜுன்ஜுன்வாலா குடும்பத்திற்கு நஷ்டம் ஏற்படும். அவர்கள் விற்காமல் இருந்தால் அதன் மதிப்பு குறையுமே தவிர நஷ்டம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications