ஜே.என்.யூ. வன்முறைகளில் ஏபிவிபி, இடதுசாரி மாணவர்கள் ஈடுபட்டனர்- இந்தியா டுடே; ஏபிவிபி மறுப்பு
டெல்லி: ஜே.என்.யூ வன்முறைகளில் ஏபிவிபி மற்றும் இடதுசாரி மாணவர்கள் என இருதரப்பும் வன்முறையில் ஈடுபட்டதாக வீடியோக்களை பேட்டிகளுடன் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
டெல்லி ஜே.என்.யூ. வன்முறைகளுக்கு 4 இடதுசாரி அமைப்புகளும் அவற்றின் நிர்வாகிகளும்தான் காரணம் என டெல்லி போலீசார் குற்றம்சாட்டினர். இதனை இடதுசாரி அமைப்புகளின் நிர்வாகிகள் நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சி ஏபிவிபி, இடதுசாரி மாணவர்கள் என இருதரப்புமே வன்முறையில் ஈடுபட்டதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா டுடேவுக்கு ஏபிவிபி மாணவர் அமைப்பின் முதலாமாண்டு மாணவராக கூறப்படும் அக்ஷத் அவஸ்தி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஆம் தாக்குதல் நடத்தினேன்
ஜே.என்.யூ. பெரியார் விடுதி அருகே கொடிகம்பம் ஒன்றில் இருந்து தடியை உருவி எடுத்து கையில் வைத்திருந்தேன். தாடி வைத்திருந்த ஒருநபரைப் பார்த்தேன். அவர் பார்ப்பதற்கு காஷ்மீரி போல இருந்தார். அவரை நான் தாக்கினேன்.

இட்டதுசாரிகள் மீது தாக்குதல்
ஏபிவிபியின் அமைப்பு செயலாளர் நான். இடதுசாரி மாணவர்கள் சபர்மதி விடுதியில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். நாங்கள் தாக்குதல் நடத்திய போது அவர்கள் உள்ளே நுழைந்து அடைக்கலம் புகுந்தனர். இவ்வாறு அவஸ்தி கூறினார்.

அக்ஷத் அவஸ்திக்கு உதவி
இதேபோல் ஏபிவிபியின் மற்றொரு உறுப்பினராக சுட்டிக்காட்டப்படும் ரோகித் ஷா அளித்த பேட்டியில், அவஸ்தியை ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும் என நானே கூறினேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

சர்வர் அறை மூடல்
மேலும் ஏ.ஐ.எஸ்.ஏ. எனும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவராக சொல்லப்படும் கீதா குமாரி, இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், எங்களது துணைவேந்தர் அனைத்தையும் ஆன்லைனில்தான் செய்ய வேண்டும் என்கிறார். சுற்றறிக்கைகளை ஆன்லைனில் அனுப்புகிறார்; புத்தாண்டு வாழ்த்துகளை ஆன்லைனில் அனுப்புகிறார்; எச்சரிக்கைகளை ஆன்லைனில் அனுப்புகிறார்.

கோபத்தால் மூடினோம்
எங்களது கோரிக்கைகளை நேரடியாக சந்தித்து தெரிவிக்க அவர் வாய்ப்பே தருவதில்லை. ஆகையால்தான் ஆன்லைன் சர்வர் அறையை இழுத்து மூடினோம். அப்படி செய்தால் நிர்வாகம் முடங்கும் என கருதினோம் என கூறியுள்ளார்.

ஏபிவிபி திட்டவட்ட மறுப்பு
இருப்பினும் ஏபிவிபி அமைப்பானது அக்ஷத் அவஸ்தி, ரோகித் ஷா இருவரும் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என நிராகரித்துள்ளது. மேலும் ஏபிவிபி அமைப்பில் இருவரும் எந்த பொறுப்பிலும் இருவரும் இல்லை. ஜே.என்.யூ,வி. யார் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறியுள்ளார் ஏபிவிபி பொதுச்செயலாளர் நிதி திரிபாதி.












Click it and Unblock the Notifications