அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. சீனா அத்துமீறலுக்கு செக்? இந்த பயணம் ஏன் முக்கியம்! பரபர
டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இப்போது நல்ல உறவே இருந்து வருகிறது. உக்ரைன் போர் சமயத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்த போதிலும் இந்த நல்லுறவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல அமெரிக்க அதிபர்கள்- அது டிரம்பாக இருந்தாலும் சரி, பைடனாக இருந்தாலும் சரி, இந்தியப் பிரதமர் மோடி உடன் நல்ல ஒரு உறவையே வைத்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் இரு தரப்பு தலைவர்களும் எப்படி அன்பைக் காட்டுக் கொள்கிறார்கள் என்பதே இதற்குச் சாட்சி.
பிரதமர் மோடி: இந்தச் சூழலில் அமெரிக்க அதிபரின் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கே அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்க உள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இரு நாடுகளும் பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இந்தப் பயணம் அமையும். தொழில்நுட்பம், வர்த்தகம், உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பை இது ஏற்படுத்தித் தரும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தையும் அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்த இந்தோ-பசிபிக் பகுதியில் மற்றொரு வலுவான நாட்டுடன் நல்லுறவு வேண்டும் என்பதே பைடன் நிர்வாகத்தின் முடிவு. இதன் காரணமாகவே இந்தியாவுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கிறது.
சீனா: பிரதமர் மோடியின் இந்த அரசுமுறை அமெரிக்க-இந்தியா உறவை ஆழப்படுத்தும். இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி கடந்த 2021இல் வெள்ளை மாளிகையில் பைடனை சந்தித்தார். ஆனால், அது குவாட் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா தலைவர்களின் சந்திப்பாகும்.
ஜெனரல் எலெக்ட்ரிக் ஜெட் என்ஜின்களின் கூட்டுத் தயாரிப்பு உட்படப் பல பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் முன்முயற்சியை எடுக்க உள்ளதாக அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த மாதம் தான் அறிவித்தன.
அமெரிக்கா: இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான கூட்டாண்மை ஏற்படுத்தவே இந்த பயணம் அமையும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயணம், இந்தோ-பசிபிக் பகுதியில் சுதந்திரமான, பாதுகாப்பான நிலைமையை உருவாக்க உதவும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆதிக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் தைவானுடன் மோதுவது, மறுபக்கம் ஜப்பானைச் சீண்டுவது எனச் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் செல்கிறார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications