டெல்லிக்குள் நுழையும் ராகுல் யாத்திரை.. காத்திருக்கும் கமல்ஹாசன்.. குஷியில் காங். பீதியில் பாஜக!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணம் (பாதயாத்திரை) நாளை டெல்லியில் நுழைகிறது. முன்னதாக ஹரியானாவில் இன்று ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் திமுக துணை பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான கனிமொழி இணைந்தார். டெல்லியில் நாளை ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைய உள்ளனர். கொரோனா பரவல் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை டெல்லியில் கால் வைக்க இருக்கிறது.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மையமாக வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை செப்டம்பர் 7-ல் ராகுல் காந்தி தொடங்கினார். கன்னியாகுமரியில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் யாத்திரையை தொடங்கி வைத்தார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து ஹரியானாவில் நடைபெற்று வருகிறது.

ஹரியானாவில் இன்று ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மூத்த திமுக தலைவர் கனிமொழி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் இருந்து சுமார் 2,000 கி.மீ நடைபயணத்தை நிறைவு செய்யும் நிலையில் நாளை உ.பி. மாவட்ட எல்லைகள் வழியாக டெல்லியை வந்தடைகிறார் ராகுல் காந்தி. டெல்லியில் நாளை காலை பாதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருந்து பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்குகிறார். அங்கிருந்து ஜெய்ராம் ஆசிரமம், ஆஸ்ரம் சவுக் பகுதிகளை நோக்கி சுமார் 16 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. மதுரா சாலை, ஜாஹிர் உசேன் மார்க், இந்தியா கேட், திலக் மார்க், ஐடிஓ, பகதூர்ஷா ஜாபர் மார்க், நேதாஜி சுபாஷ் மார்க், அங்கபால் தாமஸ் சர்க்கிள் வழியாக ராகுலின் முதல் கட்ட நடைபயணம் டெல்லியில் நடைபெற உள்ளது. ராகுலுடன் பாதயாத்திரையாக வருபவர்கள், அங்கபால் தாமஸ் சர்க்கிளில் முகாமிடுகின்றனர். ராஜ்காட், சக்தி ஸ்தல், வீர்பூமி உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட உள்ளனர்.

டெல்லியில் நாளை ராகுல் காந்தியின் யாத்திரையிலும் கனிமொழி எம்.பி. பங்கேற்க உள்ளார்.அவருடன் திமுக உள்ளிட்ட காங்கிரஸின் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பலரும் ராகுல் யாத்திரையில் இணையக் கூடும். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாளை ராகுல் காந்தியின் பேரணியில் இணைந்து நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக கமல்ஹாசன் இன்று டெல்லி செல்கிறார். ராகுல் காந்தியின் டெல்லி நடைபயண நிகழ்வுகளை மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால் ஒருங்கிணைத்து வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்டவைகளை முன்வைத்து ராகுல் யாத்திரையை தடுக்க முயற்சிக்கிறது பாஜக என்பது குற்றச்சாட்டு.

டெல்லியில் நாளை ஒருநாள் பாதயத்திரை முடிவடைந்த பின்னர் மொத்தம் 9 நாட்கள் ஓய்வு எடுக்கப்பட உள்ளது. பின்னர் ஜனவரி 3-ந் தேதி டெல்லியில் இருந்து பஞ்சாப் நோக்கி ராகுல் காந்தியின் நடைபயணம் செல்ல இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் செல்கிறது ராகுலின் நடைபயணம். இந்த 2-ம் கட்ட நடைபயணமானது மீண்டும் ஹரியானா, உ.பி.யின் பானிபட் மாவட்டம் சனோலி குர்த் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது. பஞ்சாப்பில் சுமார் 10 நாட்கள் ராகுல் நடைபயணம் மேற்கொள்வார். இம்மாத இறுதியில் ஜம்மு காஷ்மீருக்குள் ராகுல் காந்தி நுழைகிறார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் முதுபெரும் அரசியல் தலைவருமான பரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை வரவேற்க இருக்கிறார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications