விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம்.. இன்னொரு போர்க்களமாகும் ஹரியானாவின் கர்னால்
டெல்லி: மத்திய பா.ஜ.க.அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து அம்மாநிலத்தின் கர்னால் பகுதியில் இன்று பிரமாண்ட போராட்டம் நடத்தப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை அமல்படுத்தியது. இதனை எதிர்த்து டெல்லியில் 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் பஞ்சாப், உ.பி, உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

மத்திய அரசு பேச்சுவார்த்தை
உச்சநீதிமன்றமும் தலையிட்டு புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மத்திய அரசைப் பொறுத்தவரையில் வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர தயார் என்கிறது. இதனை நிராகரிக்கும் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக விவசாய சட்டங்களையே திரும்பப் பெற வேண்டும் என்கின்றனர்.

ஜந்தர்மந்தர் போராட்டம்
அண்மையில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்ற போது டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போலீஸ் தடியடி
இதனையடுத்து ஹரியானாவில் அம்மாநில பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை மிக மோசமாக இழிவுபடுத்தியதால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் மனோகர்லால் கட்டாவை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது போலீசார் கொடூரமாக தடியடி நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்டை பிளக்கப்பட்டனர். இது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முசாபர்நகர் மகா பஞ்சாயத்து
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் வரும் 27-ந் தேதி நாடுதழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் உ.பி, உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

கர்னாலில் மெகா போராட்டம்
இதனிடையே ஹரியானாவில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இன்று கர்னால் பகுதியில் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் பிரமாண்ட போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கர்னால் பகுதியில் ஹரியானா போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இணைய சேவைகள், செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் போராடும் விவசாயிகளும் பிற மாநில விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அத்துடன் அங்கு பெருமளவு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications