கர்நாடகா பாஜகவில் பரபரப்பு- வாரிசுகளுக்கு சீட் கிடையாது- பிரதமர் மோடி கறார் காட்டுவதால் கடும் ஷாக்!
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறாராம். இதனால் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம்.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் பாஜக மேலிடம் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே போலி பாஜக வேட்பாளர் பட்டியல் ஒன்று வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் டெல்லியில் பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம், பாஜக கர்நாடகா மாநில தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பு நீடிக்கிறது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கிவிடுவார்; அதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை காலை பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக பாஜக தலைவர்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவே கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தாராம். வாரிசு அரசியலை மிக கடுமையாக பேசுகிற நாம், வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தும் வகையில் சீட் கொடுப்பது எப்படி சரியாகும்? என்பது பிரதமர் மோடியின் நிலைப்பாடாம். பிரதமர் மோடியின் இந்த கருத்தால் முன்னாள் முதல்வரும் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான எடியூரப்பா கடும் அதிர்ச்சி அடைந்தாராம்.
எடியூரப்பா முதுமை காரணமாக தாம் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுகிறேன் என அறிவித்தார். ஆனால் மகன் விஜயேந்திரா தேர்தலில் போட்டியிடுவது உறுதி என கூறி வந்தார் எடியூரப்பா. அதுவும் பாஜக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருப்பதால் மகன் விஜயேந்திரா மற்றும் 15 ஆதரவாளர்களுக்கு எப்படியும் சீட் வாங்கி தருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் எடியூரப்பா. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எதுவுமே தமக்கு சாதகமாக இல்லை என உறுதியானதால் எடியூரப்பா ரொம்பவே அதிர்ந்து போனாராம். இதனால் டெல்லியில் இருந்து உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டுவிட்டாராம்.
அதேநேரத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா மாநில தலைவர்களுடன் வேட்பாளர் பட்டியல், பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து விவரித்திருக்கிறார். மேலும் கர்நாடகா மாநில பாஜக மேலிட பொறுப்பாளர்கள் பரிந்துரைத்த பெயர்கள், அவர்களுக்கு எதிராக களமிறங்கும் பாஜக பிரபலங்கள் பட்டியல் குறித்தும் ஜேபி நட்டா ஆலோசித்திருக்கிறார்.
இந்த ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேரடியாக தலையிட்டு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய உள்ளனராம். மொத்தம் 175 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஓரளவு இறுதி செய்யப்பட்டுவிட்டதாம். எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்தான் முடிவு செய்யப்படவில்லையாம். இதனால் பாஜகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications