கர்நாடகா பிட்காயின் மோசடியை மூடி மறைப்பதா? உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க ராகுல் கோரிக்கை
டெல்லி: கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கும் பிட்காயின் மோசடி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகா பிட்காயின் மோசடி தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, கவுரவ் வல்லப் ஆகியோர் கூறியதாவது; கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதியன்று ஹேக்கர் ஶ்ரீ கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். அப்போது போலீஸ் கஸ்டடியில் 100 நாட்கள் ஶ்ரீகிருஷ்ணா வைக்கப்பட்டார்.
ஶ்ரீ கிருஷ்ணா மீது அடுத்தடுத்து பல வழக்குகள் தொடர்ச்சியாக போடப்பட்டன. மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னரே இந்த ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை.

ஹேக் மூலம் முறைகேடு
மேலும் ஶ்ரீ கிருஷ்ணா தாம் போலீஸ் கஸ்டடியில் இருந்த போது வெளிநாட்டு நிறுவனங்கள், இணையதளங்களை ஹேக் செய்ய வைத்ததாகவும் அதன் மூலம் பல்லாயிரம் கோடி டாலர் பணம் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பாக சுயாதீனமாகவே வாக்குமூலம் கொடுத்துள்ளார். Bitfinex உள்ளிட்ட இணையதளங்களை சட்டவிரோதமாக ஹேக் செய்யும்படி ஶ்ரீகிருஷ்ணா வலியுறுத்தப்பட்டுள்ளார்.

ரூ5,240 கோடி மோசடி?
ஏற்கனவே 2016-ம் ஆண்டு Bitfinex நிறுவனமானது 1,20,000 பிட்காயின்கள் திருடு போனதாக புகார் தெரிவித்திருந்தது. ஶ்ரீ கிருஷ்ணாவும் தாமும் 20,000 பிட்காயின் எடுத்து சென்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். Whale Alert' என்ற ட்விட்டர் அக்கவுண்ட்டானது 2016-ம் ஆண்டு பிட்காயின் திருட்டு சம்பவத்துக்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை மிகப் பெரும் எண்ணிக்கையில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது. மொத்தம் ரூ5,240 கோடி மதிப்பில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் நடைபெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பசவராஜ் பொம்மையை தண்டிக்க வேண்டும்
பிட்காயின் மோசடி என்பது ஒரு சர்வதேச குற்றம். ஶ்ரீ கிருஷ்ணாவை கைது செய்த உடன், இண்டர்போலுக்கு தெரிவிக்கவில்லை. ஶ்ரீ கிருஷ்ணா கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப் பின்னரே இண்டர்போலுக்கு தகவல் கொடுத்திருக்கிறது பெங்களூரு போலீஸ். இந்த விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு என தொடர்புடைய விசாரணை ஏஜென்சிகளுக்கும் எந்த தகவலும் பெங்களூரு போலீசார் தரவில்லை. இந்த கால கட்டத்தில் அதாவது 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் கடந்த ஜூலை 28 வரை கர்நாடகா உள்துறை அமைச்சராக இருந்தவர்தான் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த விவகாரத்தில் பசவராஜ் பொம்மை நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பிட்காயின் மோசடியை மூடி மறைப்பதில் யார் யார் தீவிரம் காட்டுகின்றனர்? என்பது தெரியவர வேண்டும். பசவராஜ் பொம்மை மற்றும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த மோசடிக்குமான தொடர்புகள் கண்டறியப்பட வேண்டும். இவ்வாறு ரந்தீப் சுர்ஜிவாலா கூறினார்.

ராகுல் கோரிக்கை
இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பிட்காயின் மோசடி மிகப் பெரியது. அதைவிட அதை மூடி மறைக்க முயற்சிப்பது மிகப் பெரிய குற்றம். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே முதல்வர் பசவராஜ் பொம்மையின் பதவி பறிபோகக் கூடும் எனவும் எச்சரித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications