தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறப்பு உத்தரவு- தடை கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா திடீர் மனு!
டெல்லி: தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு திடீரென புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் இப்புதிய மனுவை கர்நாடகா திடீரென தாக்கல் செய்திருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. ஆனால் கர்நாடகாவோ காவிரியில் போதுமான நீர் கையிருப்பில் இல்லை; ஆகையால் சொற்ப அளவுதான் நீரை திறக்க முடியும் கூறி வருகிறது. இதற்கும் எதிராக கர்நாடகாவில் கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் முகாமிட்டு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதேபோல கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டு அனைத்து கட்சி எம்.பிக்கள் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது போல, கர்நாடகா அனைத்து கட்சி எம்.பிக்களும் இன்று மத்திய அமைச்சரவை சந்திக்க உள்ளனர்.
முன்னதாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், டெல்லியில் காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். ராஜ்யசபாவில் பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, காவிரி பிரச்சனையில் சட்டப் போராட்டம் தேவை இல்லை- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று திடீரென புதிய மனு ஒன்றைத் தாக்க்ல் செய்துள்ளது. அதில், காவிரியில் போதுமான நீர் கையிருப்பில் இல்லை. ஆகையால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது. காவிரியில் வினாடிக்கு 5,000 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடகா அரசு இன்று திடீரென மனுவைத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications