புடினுக்கு சைவ விருந்தா? மட்டன் சுக்கா, மீன் வறுவல், இந்தியன் ஒயின் எங்கே? கார்த்தி சிதம்பரம் கேள்வி
சென்னை: குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் அசைவ உணவுகள் ஏன் தவிர்க்கப்பட்டது என்பது குறித்து சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு முறை பயணமாக இரு நாட்கள் இந்தியா வந்திருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். இவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.

புடினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார். டெல்லியில் நடந்த இந்தியா- ரஷ்யா இடையேயான 23 ஆவது உச்சி மாநாட்டில் புடினும் மோடியும் பங்கேற்றனர். அப்போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில் நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்திய சமையலின் தனித்துவ சுவைகளை வெளிப்படுத்தும் விதமாக முற்றிலும் சைவ விருந்து அளிக்கப்பட்டது.
அதிலும் முருங்கை கீரை சூப், கருப்பு கொண்டைக் கடலையால் செய்யப்பட்ட காலே சனே கே ஷிகம்பூரிஸ ஜஃப்ரானி பனீர் ரோல், தந்தூரி பர்வான் ஆலூ, அச்சாரி பெங்கன், யெல்லோ டால் தட்கா போன்ற உணவுகள் இருந்தன. அது போல் டிரை ஃப்ரூட் அன்ட் ஸாப்ரான் புலாவ், லச்சா பரோட்டா உள்ளிட்ட உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
பொதுவாக உலக தலைவர்களுக்கு அளிக்கப்படும் ராஜவிருந்துகள், நமது நாட்டின் கலாச்சாரம், உணவு முறை, மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இந்த நிலையில் இந்த ராஜ விருந்தில் அசைவம் இடம்பெறாதது குறித்து சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் கருத்து வைரலாகி வருகிறது.
விருந்தில் இடம் பெற்ற உணவுகளின் மெனுக்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது: புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் முழுக்க சைவ உணவா? ஏன்? இந்திய உணவின் பாரம்பரியத்தை உணர்த்த வேண்டுமானால் அந்த உணவில் சிக்கன், மட்டன், கடல் உணவுகள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
அது போல் இந்தியாவை சேர்ந்த ஒயினும் இடம்பெற்றிருக்க வேண்டும். 80 சதவீத இந்தியர்கள் மாமிசம், மீன்களை உண்கிறார்கள். சைவ உணவு நமது வாழ்க்கை மற்றும் உணவுப் பண்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த 'தீவிர' சைவ உணவுக்கான அழுத்தம் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. அந்த வகையில் கிஷோர் வைத் என்ற நெட்டிசன், குடியரசுத் தலைவர் மாளிகையில் மதுபானம் இல்லாமல் சைவ உணவு அளிப்பது என்பது பாரம்பரியம். இது சுதந்திரம் கிடைத்த நாள் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் சைவ உணவு விருந்து என்பது இது பாஜக கொண்டு வந்த கொள்கை அல்ல. எனவே உங்கள் மூளையை இது போன்ற தேவையற்ற கற்பனைகளில் அலைய விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications