“கரூர் நெரிசலில் ஒரு போலீசாருக்கு கூட காயம் ஏற்படவில்லை”.. தவெக வாதத்துக்கு தமிழக அரசு சொன்ன பதில்!
டெல்லி: "கரூர் நெரிசலில் ஒரு காவலருக்குக் கூட காயம் ஏற்படவில்லை" என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்த நிலையில், "என்ன வாதம் இது? போலீஸ்-க்கு காயம் ஏற்படவில்லை. அதனால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூறுகிறீர்களா?" எனத தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார்.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தவெக, இதற்காக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளது.

அதேபோல, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சந்திரா என்பவரின் கணவரும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் பிரதிக்கின் தந்தையும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுக்களை நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரித்தது.
சிறுவனின் தந்தை தரப்பில், "கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இடையூறாக இருக்கும் என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம் கூறியது. அந்த இடத்தில் தான் விஜய் கூட்டத்துக்கு செப்டம்பரில் அனுமதி தரப்பட்டது. கரூர் பிரசாரத்தில் ரவுடிகள் நுழைந்தனர். காவல்துறை விசாரணையில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை இல்லை. உண்மை வெளிவர சிபிஐ விசாரணை தேவை. போலீஸ் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டது, போலீஸ் விசாரிக்கக் கூடாது" என வாதிடப்பட்டது.
மேலும், கரூர் கூட்ட நெரிசலில் பலியானவரின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கரூர் நெரிசலில் ஒரு காவலருக்குக் கூட காயம் ஏற்படவில்லை" என வாதம் வைத்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "என்ன வாதம் இது? போலீசாருக்கு காயம் ஏற்படவில்லை. அதனால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூறுகிறீர்களா?" எனத கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, தவெக, தமிழக அரசு தரப்பு சார்பில் காரசார விவாதங்கள் நடந்தன. இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், பரஸ்பர குற்றம்சாட்டுவது முக்கியமானதல்ல, உண்மை வெளிவர வேண்டும் என்று கூறி, தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது. அதோடு தேதி குறிப்பிடாமல் உத்தரவை ஒத்தி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
