மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543ல் இருந்து 884 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதா? -கதிர் ஆனந்த்
டெல்லி: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543ல் இருந்து 884 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் சுற்றி வளைத்து ஒரு பதிலை கூறியிருக்கிறார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் கூறாமல், உயர்த்தப்படாது என்றும் கூறாமல் தொகுதி எண்ணிக்கை வரையறை நிர்ணய ஆணையம் உரிய நேரத்தில் முடிவு செய்யும் என மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. எழுப்பிய கேள்வியும் அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதிலும் வருமாறு;
2026ஆம் ஆண்டு நாட்டிலுள்ள மக்களவைத் தொகுதி எண்ணிக்கை/வரையறை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அவ்வாறாயின், அதன் விவரங்கள் யாவை?
மாநிலங்களில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை/வரையறை நிர்ணய நடவடிக்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளின் விவரங்கள் யாவை?
மக்களவைத் தொகுதி எண்ணிக்கை நிர்ணயக் குழுவின் முடக்கம் 2026 ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்தவுடன் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543ல் இருந்து 884 ஆக அதிகரிக்குமா?
அதன்படி நாடெங்கும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் மாநிலம் வாரியாக எண்ணிக்கை விவரங்கள் யாவை?

ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜுஜு எழுத்து பூர்வமாக அளித்த பதில் விவரம் வருமாறு; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 82, 170, 330 மற்றும் 332 ஆகியவை மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை நிர்ணயத்தை நிர்வகிக்கிறது.
கடந்த தொகுதி எண்ணிக்கை வரையறை நிர்ணய ஆணை, 2008 உடன் இந்த அனைத்து விதிகள் தொடர்பான தகவல்களும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://eci.gov.in ல் "டிலிமிட்டேஷன்" என்ற தலைப்பின் கீழ் கிடைக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, 2002 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (எண்பத்தி நான்காவது திருத்தம்) சட்டத்தின்படி "2000" முதல் "2026" வரை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை நிர்ணய முடக்கம் நீட்டிக்கப்பட்டது.

தேசிய மக்கள்தொகை கொள்கை அடிப்படையில் ஒரு பகுதியாக மக்கள்தொகை உறுதிப்படுத்தலுக்கான நிகழ்ச்சி நிரலை மாநில அரசுகள் தொடர உதவும் ஒரு ஊக்கமூட்டும் நடவடிக்கையாக 2026 ஆம் ஆண்டு வரை புதிய எண்ணிக்கை வரையறை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கான தடையை நீட்டிக்க முடிவு செய்தது.
இதை இதற்காக அமைக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கை வரையறை நிர்ணய ஆணையம் உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications