7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராத ஜனாதிபதி திரவுபதி முர்மு.. உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய கேரளா!
டெல்லி: கேரளா மாநில சட்டசபையில் நிறைவேற்ற 7 மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிடப்பில் போட்டு வைத்திருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா மாநில அரசு அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளது.
நாட்டின் அரசியல் சாசன பதவிகள் ஜனாதிபதி, ஆளுநர் பதவிகள். ஆனால் பல மாநிலங்களில் ஆளுநர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற மாநில அரசுகளை சீண்டிக் கொண்டே இருப்பது வழக்கமாகிவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகள், மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்களை அரசியல் நோக்கங்களுக்காக கிடப்பில் போடுவது, திருப்பி அனுப்புவது போன்ற அணுகுமுறைகளை கையாள்கின்றனர் ஆளுநர்கள். இதற்கு எதிராக பல மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் ஆளுநர்களைத்தான் உச்சநீதிமன்றம் வெளுத்து வாங்கி இருக்கிறது.
அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சராக பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க பரிந்துரைத்தார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், ஆளுநர் ஆர்.என்.ரவியை மிக மிக கடுமையாக சாடி எச்சரித்தது. பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கெடுவும் விதித்தது. இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி வேறுவழியே இல்லாமல் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் போயிருக்கிறது கேரளா மாநில அரசு. கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசின் முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக கேரளா அரசு தாக்கல் செய்த மனுவில், பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மொத்தம் 7மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் இந்த 7 மசோதாக்களுக்கும் ஒப்புதல் தராமல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மாநிலத்தின் ஆளுநர் ஆரீஃப் முகமது கானும் மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார். பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார். ஜனாதிபதியும் ஒப்புதல் தராமல் இருந்து வருகிறார். இது அரசியல் சாசனப் பிரிவு 14-ஐ மீறுகிற நடவடிக்கை. கேரளா அரசின் மசோதாக்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிறுத்தி வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராகவும் கேரளா அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.












Click it and Unblock the Notifications