முதுகில் குத்தும் அமெரிக்கா.. இது முதல் முறையில்லை.. இந்தியாவை எப்போதெல்லாம் சீண்டினார்கள் தெரியுமா?
டெல்லி: "இந்திய ராணுவ தளங்களை தகர்க்க போர்க் கப்பல்கள் விரையட்டும்!" - இது சினிமா வசனமல்ல... 1971-இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், இந்தியாவுக்கு எதிராக உண்மையிலேயே செய்த அச்சுறுத்தல்! இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வரலாற்றில் பல முறை மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை போர் நிலைமைகளை உருவாக்கியிருந்தாலும், இன்று இரு நாடுகளும் ஸ்ட்ராடஜிக் கூட்டணியாக இருப்பது போல் தெரிந்தாலும் - கடந்த காலத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் இன்றும் இந்தியர்கள் மனதில் பதிந்து கிடக்கின்றன.

அமெரிக்காவின் "கருப்பு திருப்புமுனை"
இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி - வங்கதேச விடுதலை. ஆனால் இந்த வெற்றிக்கு முன்னால், தடுப்பு சுவர் போல, இந்தியாவுக்கு எதிராக ஒரு பெரும் சக்தி நின்றது - அதன் பெயர் அமெரிக்கா! அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் முழு அழுத்தத்தையும் கொடுத்தார். ஏன்?
- பனிப் போர் கணக்கு: சோவியத் யூனியன் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததால், அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரித்தது.
- சீனாவுடன் நட்பு: நிக்சன் சீனாவுடன் நட்பு வளர்க்க முயன்றபோது, பாகிஸ்தான் அதற்கான பாலமாக இருந்தது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள்:
- வங்கக் கடலில் அணு கப்பல்! டிசம்பர் 1971-இல், USS Enterprise என்ற அணு சக்தி கொண்ட விமானம் தாங்கும் போர்க் கப்பல் உட்பட Task Force 74 கப்பல்களை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பியது அமெரிக்கா. இது இந்தியாவுக்கு நேரடி அணு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
- வங்கதேசத்திலுள்ள அமெரிக்கர்களை வெளியேற்ற அனுப்பியதாக அப்போது கூறப்பட்டாலும், இந்திய ராணுவ தளங்களை தாக்கத்தான் அந்த கப்பல்கள் வங்காள விரிகுடாவிற்கு அனுப்பப்பட்டன என்ற உண்மை பிற்காலத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியாவின் உயிர்த் தோழன், சோவியத் யூனியன் (ரஷ்யா), உடனடியாக, தனது அணு ஆயுத போர்க் கப்பலை இந்திய பெருங்கடலுக்கு அனுப்பி வைத்து, அமெரிக்காவுக்கு அரைகூவல் விடுத்தது. அடங்கியது அமெரிக்கா.
- ரகசிய ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு! அமெரிக்க காங்கிரஸ் தடை இருந்தபோதும், அமெரிக்கா ஜோர்டான், ஈரான் வழியாக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை ரகசியமாக அனுப்பியது.
- ஐ.நா.வில் அழுத்தம்: அமெரிக்க தூதர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
- இந்தியாவின் பார்வையில் இது ஒரு துரோகம். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவது அமைதிக்கு எதிரானது என்று கருதப்பட்டது.

கோவா விடுதலை
கோவா போர்த்துக்கீசியர் ஆட்சியில் இருந்தபோது, 1961-இல் இந்தியா ராணுவத்தை அனுப்பி கோவாவை விடுவித்தது. ஆனால் இதற்கு அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அமெரிக்க தூதர் ஆட்லை ஸ்டீவன்சன், இந்தியாவின் செயலை ஐ.நா. சபையில் "உலக அமைதிக்கு எதிரானது" என்று கண்டித்தார்.
கென்னடி நிர்வாகம் இந்தியாவுக்கான வெளிநாட்டு உதவியை 25 சதவீதம் வரை குறைத்தது. பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி உடன் கூட்டு தீர்மானம் கொண்டு வர முயன்றது. கோவா இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காலனித்துவத்தை முடிக்க இது அவசியம். ஆனால் அமெரிக்கா காலனிய போர்த்துக்கீசியருக்கு ஆதரவு தந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க தடை
வாஜ்பாய் ஆட்சி காலத்தில், இந்தியா பொக்ரானில் அணுசோதனை நடத்தியபோது (மே 1998), அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
- முழு பொருளாதாரத் தடைகள்: உதவி, பாதுகாப்பு உபகரண ஏற்றுமதி, கடன் உத்தரவாதங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
- உலக நிதி நிறுவனங்களுக்கு அழுத்தம்: உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்றவை இந்தியாவுக்கு கடன் கொடுக்காதவாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.
- இந்தியாவை வளைய வைக்க முயற்சி: CTBT, NPT-க்கு இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று அழுத்தம் தந்தது.
- இந்த தடைகள் 1999 வரை நீடித்தன. ஆனால், காலப்போக்கில் இரு நாடுகளும் சமரசம் செய்துகொண்டன.

வர்த்தகம், ரஷ்ய எண்ணெய், காஷ்மீர்!
இன்று இந்தியா-அமெரிக்கா 2+2 உச்சி மாநாடுகள் நடத்துகின்றன. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தால் பதற்றங்கள் தொடர்கின்றன. சமீபத்திய மோதல்கள்:
- ரஷ்ய எண்ணெய் குறித்து டிரம்ப்: உக்ரைன் போரின் போது இந்தியா ரஷ்ய எண்ணெயை குறைந்த விலையில் வாங்கியதால், அமெரிக்கா கடும் விமர்சனம் தெரிவித்தது. டிரம்ப், "இந்தியாவின் இறக்குமதிக்கு அதிக வரிகளை விதிப்பேன்" என்று அச்சுறுத்தினார்.
- ஈரானுடன் வர்த்தகம் - அமெரிக்க தடை: அமெரிக்கா ஈரானுக்கு தடை விதித்திருந்தாலும், சில இந்திய நிறுவனங்கள் அங்கு வர்த்தகம் செய்ததாக குற்றம் சாட்டி, 8 இந்திய நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டது.
- காஷ்மீர் பற்றி டிரம்ப் கருத்து: "நான் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும்" என்று டிரம்ப் சொன்னது, இந்தியாவை கோபப்படுத்தியது. இது இருதரப்பு விவகாரம், மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்று இந்தியா தெளிவுபடுத்தியது.பாகிஸ்தானுடனான மோதலை நான் சொல்லி இந்தியா நிறுத்தியது என்று டிரம்ப் கூறியதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், 2000களுக்குப் பிறகு, சீனாவின் அதிகாரம் வளர்ந்ததால், அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமானது. இன்று QUAD, பாதுகாப்பு கூட்டணி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு - அனைத்தும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், டிரம்பின் வர்த்தக ஆசை அதற்கு உலை வைக்கும் நிலையில் கொண்டு சென்று விட்டுள்ளது.
"எதிரிகள் அல்ல, ஆனால் நட்பு எப்போதும் நிலையானது இல்லை!" இதுதான் இந்திய-அமெரிக்க உறவாக இருந்து வந்துள்ளது. அமெரிக்கா எடுத்த நிலைப்பாடுகளும் அந்த வரலாறும் மறக்கப்படவில்லை... மாறாக, இந்தியாவின் தன்னம்பிக்கையை அது வலுப்படுத்தியிருக்கிறது. அவர்கள் போர்க் கப்பலை அனுப்பினாலும் வென்றது நாமே, அவர்கள் பொருளாதார தடையை விதித்தாலும், வளர்ந்தது நாமே..












Click it and Unblock the Notifications