தலைவலியாக உருவெடுக்கும் காலிஸ்தான் பயங்கரவாதம்? வெளிநாடுகளில் ஆகஸ்ட் 15-ல் இந்திய தூதரகம் முற்றுகை?
டெல்லி: இந்தியாவில் சீக்கியர் இனத்தவருக்கு காலிஸ்தான் தனிநாடு கேட்கும் கோரிக்கை மத்திய பாஜக அரசு பெரும் தலைவலியாக உருவெடுக்க தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஆகஸ்ட் 15-ல் இந்திய தூதரகங்களை முற்றுகையிட திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்கள் வாழும் மாநிலங்களின் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. இதற்காக பிந்தரன்வாலே தலைமையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டமும் நடத்தினர். ஆனால் இந்த ஆயுதப் போராட்டத்தை 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அழித்து ஒழித்தார். பஞ்சாப் பொற்கோவிலில் பிந்தரன்வாலே உள்ளிட்ட சீக்கிய பயங்கரவாதிகளின் கதையை இந்திரா காந்தி அம்மையார் முடித்தார். ஆனாலுல் பிந்தரன்வாலே பற்ற வைத்த நெருப்பு 1990கள் வரை தொடர்ந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல சீக்கியர் பயங்கரவாதம் அடங்கியது.

அதேநேரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தங்களுக்கான இயக்கங்களை கட்டமைத்தனர். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வேர்பிடித்து வளர ஆரம்பித்தனர். இந்த பயங்கரவாதிகள்தான் இந்தியாவில் மீண்டும் பிரிவினைவாதத்தை கிளப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு இந்த பிரிவினைவாதத்தை அடக்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு காலிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிடுகிற சக்திகள், அடுத்தடுத்து மர்மமாக மரணித்தும் வருகின்றனர். இந்த மரணங்களுக்கு இந்திய அரசுதான் பொறுப்பு என்கின்றனர் காலிஸ்தான் ஆதரவாளர்கள். இந்த மரணங்களால் காலிஸ்தான் கும்பல் ஆடிப் போயிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் கோஷ்டி நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. ஆனால் இந்த காலிஸ்தான் கும்பலின் போராட்டத்துக்கு பெரிய அளவு ஆதரவு இல்லை என்கின்றன தகவல்கள்.
இதனையடுத்து நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15-ந் தேதியன்று வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பிவிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications