இந்தியா வருகிறார் பூட்டான் மன்னர்.. சீனா விஷயத்தில் என்ன நிலைப்பாடு? பரபர ஆலோசனை
டெல்லி: இந்தியாவிற்கு இன்று வரும் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். சீனாவுடன் பூட்டான் நெருக்கம் காட்டி வரும் நிலையில் மன்னரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னைகள் கூர்மையடைந்துள்ளன. லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா ராணுவத்திற்கும், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலிலிருந்து அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இப்படி இருக்கையில், நமது அண்டை நாடான பூட்டான், சீனாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது. இந்தியாவை போலவே பூட்டானும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 764 சதுர கி.மீ பரப்பளவு எல்லையாக இருக்கிறது. இப்படி இருக்கையில் கடந்த 2020ம் ஆண்டு பூட்டானில் உள்ள சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தை சீனா உரிமை கோரியது. ஆனால் பூட்டான் இதனை நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து எல்லையை வரையறுத்துக்கொள்வதில் இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், இனி வரும் காலங்களில் எல்லையை பிரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு தரப்பினரும் ஒரு நிபுணர் குழுவின் கூட்டத்தை நடத்தி எல்லையை நிர்ணயிப்பதற்கான தொழில்நுட்பக் குழுவை அமைத்தனர். தொழில் நுட்ப குழுவின் முதல் கூட்டமும் அதே மாதத்தில் நடத்தப்பட்டது.
இங்குதான் இந்தியாவுக்கு சிக்கல் மேலெழுகிறது. அதாவது, ஹிமாலயன் ஷாங்க்ரிலாவின் வட-மத்திய பிராந்தியத்தில் சீனா தனது பிராந்திய உரிமைகளை பூட்டானுக்கு விட்டுக்கொடுக்க தயாராகியுள்ளது. அதேபோல இதற்கு பதிலாக மேற்கு பூட்டானில் டோக்லாம் அருகே உள்ள சில பகுதிகளை சீனாவுக்கு பூட்டான் விட்டுக்கொடுக்க இருக்கிறது. இதன் மூலம் டோக்லம் பீடபூமி மற்றும் '3 சந்திப்பு புள்ளி' ஆகிய இடங்களை கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டு வந்துவிடும்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஏற்கெனவே மோதல் போக்கு இருக்கும் நிலையில் சீனா இந்த கட்டுப்பாட்டை கையில் எடுத்தால், இந்தியாவுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டுடன் இணைக்கும் சிலிகுரி வழித்தடத்தை முடக்க சீனா சதி செயல்களை செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு.
இப்படி இருக்கையில்தான் 8 நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று பூட்டான் மன்னர் இந்தியாவுக்கு வருகிறார். சீனாவுடன் பூட்டான் நெருக்கம் பாராட்டி வரும் நிலையில் இந்த அவரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக மதிப்பிடுவதற்கும், கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கும் இந்த பயணம் உதவும் என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
டெல்லி வரும் மன்னரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்கிறார். அதேபோல பிரதமர் நரேந்திர மோடியை பூட்டான் மன்னர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications