குக்கி-மைத்தேயி மோதல்.. ஐரோப்பிய நாடாளுமன்றம் வரை சென்ற மணிப்பூர் வன்முறை! இந்தியா கடும் எதிர்ப்பு
டெல்லி: மணிப்பூரில் தொடரும் வன்முறை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்க பட்டியலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் செயல்பட்டு வருகிறார். இங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். குக்கி எனும் இனத்தை சேர்ந்த மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் தான் குக்கி மக்களை போல் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி பிரிவு மக்கள் வலியுறுத்தினர். இதற்கு குக்கி இனக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி மணிப்பூரில் ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 130க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மத்திய இணையமைச்சர், மாநில அமைச்சர் உள்பட அரசியல்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு வன்முறையை கட்டுப்படுத்த முயன்றார். இதுவும் கைக்கொடுக்கவில்லை. மேலும் அமித்ஷா தலைமையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி கூட்டமும் நடந்தது. தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் மணிப்பூரில் ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும், அங்கு ஆட்சி செய்யும் மாநில அரசும் கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடாது. ஆனால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது. ஐரோப்பா நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில் அதனை மீறி இந்தியா விவகாரம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தில் இருந்து விலகி ஆட்சி நடத்தும் சம்பவங்கள் என்ற தலைப்பில் விவாதங்கள் நடக்க உள்ளது. இதில் தான் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன், ‛‛மணிப்பூர் விஷயம் உள்நாட்டு விவகாரமாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது பற்றி அறிந்துள்ளோம். அவர்களிடம் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை தெளிவுப்படுத்தி உள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications