ரயில்வே வேலைக்கு நிலம் வழக்கு: ஒட்டுமொத்த லாலு பிரசாத் குடும்பத்துக்கு கிடைத்தது ஜாமீன்!
டெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கு ஒட்டுமொத்தமாக டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
ரயில்வே பணி வழங்குவதற்கு நிலம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனருமான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தற்போதைய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மகள் பிசா பார்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. லாலு பிரசாத் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக ராப்ரி தேவி மற்றும் உறவினர்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்தனர். அன்னிய செலாவணி மோசடி பிரிவுகளின் கீழ் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஒட்டுமொத்தமாக லாலு குடும்பம் ஆஜராகி இருந்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் குடும்பம் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தது. இன்று டெல்லி நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக லாலு குடும்பத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள லாலு பிரசாத் யாதவ், பாஜகவுக்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் பிரதான பங்களிப்பு செய்து வருகிறார். "இந்தியா" கூட்டணியின் கூட்டங்களில் தொடர்ந்து லாலு பங்கேற்கிறார். லாலுவின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications