'குஜராத் தேர்தல்' பாஜகவின் இரட்டை என்ஜின் வஞ்சகத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவோம்.. ராகுல் பரபர!
டெல்லி: பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, குஜராத் தேர்தலில் பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவோம் என்றும், எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், ரூ. 3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி என வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
182- தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

டிசம்பர் 8-ஆம் தேதி தேர்தல்
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 1 ஆம் தேதி 89 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஆட்சி செய்யும் பாஜக இம்முறையும் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற திட்டத்தில் வியூகத்தை வகுத்து வருகிறது.

மும்முனை போட்டி
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதேபோல், கடந்த 2017- ஆம் ஆண்டு தேர்தலில் 77 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் இந்த கோதாவில் குதித்துள்ளது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, வேட்பாளர்கள் அறிவிப்பு, வாக்குறுதிகள் என ஆம் ஆத்மி தேர்தல் வேலைகளில் மிக வேகமாக இயங்கி வருகிறது.

பாஜகவை விமர்சித்து ராகுல் ட்விட்
இதனால் குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டு இருக்கும் ராகுல் காந்தி, குஜராத் தேர்தல் தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். பாஜகவையும் கடுமையாக தனது ட்விட்டரில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:-

மாற்றத்திற்கான திருவிழா
பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து உங்களை காப்பாற்றுவோம். மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், ரூ. 3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications