கல்பனா சாவ்லா போல...சுனிதா வில்லியம்ஸின் விண்கலமும் தொடர்பை இழந்த 'அந்த 7 நிமிடங்கள்'-என்ன நடந்தது?
டெல்லி: விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் விண்கலம் கடைசி 7 நிமிடங்கள், நாசாவின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதாகவும் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது வழக்கமாக ஏற்படும் இந்த 7 நிமிட துண்டிப்பில்தான் கல்பனா சாவ்லா மரணம் உள்ளிட்ட பல விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விண்கலங்கள் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் போது கடைசியில் நிகழக் கூடிய 7 நிமிட தகவல் தொடர்பு இழப்பை பிளாக்அவுட் டைம் என்கின்றனர் விஞ்ஞானிகள். விண்வெளியில் இருந்து பயணித்து நமது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைகின்ற போது அதீத வெப்பநிலையால் விண்கலத்தில் ஏற்படக் கூடிய தாக்கங்களால்தான் இந்த தகவல் தொடர்பு துண்டிப்பு நிகழ்கிறதாம். அதுவரை ஆய்வு மையத்துடன் தொடர்பில் இருக்கும் விண்கலம் திடீரென தொடர்பை இழக்கும். அப்போது விண்கலத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு மையம் கண்காணிக்க முடியாத நிலைமை உருவாகும். இது 7 நிமிட அளவில்தான் நீடிக்கும் என்றாலும் இந்த குறுகிய காலத்தில்தான் விண்கல விபத்துகள் பலவும் நிகழ்ந்துள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ரஷ்யாவின் சோயுஸ் 11 விண்கலமும் 1971-ல் இதேபோல தகவல் தொடர்பு துண்டிப்பை இழந்திருந்ததாம். அந்த தருணத்தில் பாராசூட்டுகள் உதவியுடன் வெற்றிகரமாகவும் தரையிறங்கியது சோயுஸ் விண்கலம். ஆனால் விண்கலத்துக்குள் இருந்த 3 விண்வெளி வீரர்கள் மரணம் அடைந்திருந்தனர்.
மேலும் இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, 2003-ம் ஆண்டு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய நிலையில் அவரது விண்கலம் வெடித்து சிதறியது. இதில் விண்கலத்தில் பயணித்த 7 பேரும் காற்றோடு கலந்து மரணம் அடைந்தனர். கல்பனா சாவ்லா பயணித்த கொலம்பியா விண்கல விபத்தும் இந்த 7 நிமிட தகவல் துண்டிப்பில்தான் நிகழ்ந்திருக்கிறது.
அதாவது கொலம்பியா விண்கலம், வளிமண்டலப் பகுதிக்குள் நுழைகின்ற போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது; அத்துடன் அதீத வெப்ப நிலை; அதனால் ஏற்படுகிற அதீதமான வெப்பக் காற்று ஆகியவை கொலம்பியா விண்கலத்தை தாக்கி உள்ளே ஊடுருவியதாம். இதனை உணர்ந்து தங்களை முன்னெச்சரிக்கையாக வெளியேற்றிக் கொள்ள கல்பனா சாவ்லா உள்ளிட்டோர் முயற்சிப்பதற்குள் விண்கலம் வெடித்து சிதறிவிட்டதாம். இதில்தான் கல்பனா சாவ்லா உள்ளிட்டோர் மரணம் அடைந்தனர்.
தற்போது சுனிதா வில்லியம் உள்ளிட்டோர் பயணித்த விண்கலமும் இதே தகவல் தொடர்பு துண்டிப்பை எதிர்கொண்டிருந்ததாம். இதனால் நாசா விஞ்ஞானிகள் குழு அந்த 7 நிமிடங்கள் பெரும் பதற்றத்திலேயே இருந்துள்ளனர். 7நிமிடங்களுக்குப் பின்னர் திரையில் சுனிதா வில்லியம்ஸ் பயணித்த விண்கலம் தோன்றிய வினாடிகளில்தான் விஞ்ஞானிகள் நிம்மதி அடைந்தனராம். இதன் பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பணித்த விண்கலம் பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது என்கின்றன ஊடகங்கள்.












Click it and Unblock the Notifications