சீட் தராததால் பாஜகவில் இருந்து விலகலா? மோடி இன்னமும் மன்னிக்கலையே.. பிரக்யா சிங் தாக்கூர் புலம்பல்!
டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதற்காக பிரதமர் மோடி தம்மை தனிப்பட்ட முறையில் இன்னமும் மன்னிக்கவில்லை; அதானால்தான் லோக்சபா தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் தமக்கு இம்முறை வாய்ப்பு தரவில்லை என சிட்டிங் எம்பியாக பிரக்யா சிங் தாக்கூர் புலம்பி இருக்கிறார்.
2006-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கியவர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். 2019 லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

லோக்சபா எம்பியாக பதவி வகித்த போதும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். நாடாளுமன்ற லோக்சபாவில் விவாதம் ஒன்றில் பேசுகையில், மகாத்மா காந்தியடிகளைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என புகழ்ந்தார் பிரக்யா சிங் தாக்கூர். அப்போது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராக கொந்தளித்தன. இதனால் பிரதமர் மோடி, பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துகளுக்கு மன்னிப்பு கோரினார். அதேநேரத்தில் பிரக்யா சிங் தாக்கூரை தாம் தனிப்பட்ட முறையில் மன்னிக்க முடியாது எனவும் பிரதமர் மோடி ஆணித்தரமாக தெரிவித்திருந்தார். இதன்பின்னரும் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகவே வைத்திருந்தார் பிரக்யா சிங் தாக்கூர்.
இந்த பின்னணியில் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரக்யா சிங் தாக்கூர் மீண்டும் போபால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் மிகவும் நொந்து போயிருக்கிறார் பிரக்யா சிங் தாக்கூர்.
இது தொடர்பாக பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாவது: 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவில்லை. இப்போதும் சீட் கேட்கவில்லைதான். இதற்கு முன்னர் நான் பேசிய வார்த்தைகளை பிரதமர் மோடி ஏற்கவில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார். அப்போதுதான் என்னை மன்னிக்க முடியாது என கூறியிருந்தார். இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டிருந்தேன். தற்போது பாஜக தலைமை எடுத்த முடிவை ஏற்கிறேன். நான் சில உண்மைகளை பேசினேன். ஊடகங்கள் வேறு மாதிரி திரித்துவிட்டன. இதற்காக பாஜகவில் இருந்து விலக மாட்டேன். கட்சி என்னை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் நான் தயாராகவே இருக்கிறேன். எனக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை முழுமையாக ஏற்று செயல்படுவேன் என்றார்.
லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகர் பவன் சிங், தேர்தலிலேயே போட்டியிட மாட்டேன் என அறிவித்தார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கவுதம் காம்பீர், டாக்டர் ஹர்ஷ்வர்தன் அரசியலைவிட்டு விலகிவிட்டனர். லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் தரவே கூடாது என குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல் குமுறிக் கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் பிரக்யா சிங் தாக்கூர்.
மாலேகான் குண்டு வெடிப்பு: மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008-ல் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது இந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில்தான் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்தவர் ஹேமந்த் கர்கரே. மும்பை பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் ஹேமந்த் கர்கரே வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications