தடை- உடை.. நண்பேன்டாவான ஆம் ஆத்மி- காங்கிரஸ்; 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு அறிவிப்பு- பாஜக ஷாக்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக "இந்தியா" கூட்டணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரின் ஜேடியூ, ஆர்எல்டி இந்த அணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கை கோர்த்தன. அத்துடன் மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை; திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார்.
பஞ்சாப்பில் கூட்டணி முறிவு: அதேபோல பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். இதனால் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையிலும் இழுபறி இருந்தது. "இந்தியா" கூட்டணியில் தொடர்ந்து இப்படியான பின்னடவுகள் ஏற்பட்டதை பாஜக தரப்பு வெகுவாகவும் ரசித்து விமர்சனங்களை முன்வைத்தது.
உ.பி.யில் சுமூக உடன்பாடு: பாஜகவின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் இடையே திடீரென சுமூகமான தொகுதி பங்கீடு ஏற்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை ஒதுக்கியது சமாஜ்வாதி கட்சி. இதேபோல டெல்லி, ஹரியானா, கோவா, சண்டிகர் மற்றும் குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டது.
5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு: தற்போது டெல்லி, ஹரியானா, கோவா, சண்டிகர் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் சுமூகமான தொகுதி உடன்பாட்டை அறிவித்துள்ளன. டெல்லியில் இன்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக இணைந்து இந்த தொகுதி உடன்பாட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
தொகுதி பங்கீட்டு விவரம்: இதன்படி,
டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4; காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
Delhi | Congress and AAP announce seat-sharing in Delhi, Gujarat, Haryana, Chandigarh and Goa
— ANI (@ANI) February 24, 2024
In Delhi (7 seats), Congress to contest on 3 and AAP on 4
In Gujarat (26 seats), Congress to contest on 24 and AAP on 2 (in Bharuch and Bhavnagar)
In Haryana (10 seats), Congress to… pic.twitter.com/vCauAdvkUm
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24; ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. குஜராத்தில் பரூச், பாவ்நகர் ஆகிய தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடும்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9; ஆம் ஆத்மி 1 தொகுதியில் போட்டியிடுகிறது. ஹரியானாவின் குருஷேத்ரா லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஒரே ஒரு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.
கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 2 லோக்சபா தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அதிர்ச்சி: "இந்தியா" கூட்டணியில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகளிடையே 5 மாநிலங்களில் அதிரடியாக சுமூகமான தொகுதி உடன்பாடு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பது "இந்தியா" கூட்டணி உடையும் என எதிர்பார்த்த பாஜக தரப்புக்கு அதிர்ச்சியைத் தான் தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications