‛‛பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி’’.. லோக்சபா தேர்தலில் 5 வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்!
டெல்லி: ஏழை குடும்பத்தின் ஒரு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்பட 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் இந்த 5 முக்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 8 ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கேரளா மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் மொத்தம் 39 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

அதன்பிறகு நேற்று காங்கிரஸ் சார்பில் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் மொத்தம் 43 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் லோக்சபா தேர்தலுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. பெண்களை மையப்படுத்தி இந்த 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சி விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கான உத்தரவாதங்களை அறிவித்துள்ளது. நாங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் வெறும் தேர்தலுக்கான மட்டுமல்ல. அதனை நிறைவேற்றுவோம் என்பதை சொல்லித்தான் தெரிய தேவையில்லை. ஏனென்றால் எங்களின் வாக்குறுதிகள் கல்வெட்டில் பதிக்கப்பட்டவை.
1926ல் இருந்து இன்று வரை நாம் வாக்குறுதிகளை அறிக்கையாக அளித்து நிறைவேற்றி வருகிறோம். நீங்கள் (மக்கள்) தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை வழங்கி ஆசீர்வதிக்க வேண்டும். மேலும் அரசியலமைப்பை காப்பாற்றும் இந்த போராட்டத்தில் எங்களின் கரங்களை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். மகாராஷ்டிரா மாநிலம் துலேயில் நடந்த மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 5 முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மகாலட்சுமி திட்டம்: மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
ஆதி ஆபாடி, பூரா ஹக்: “Aadhi aabaadi, poora haq” எனும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
சக்தி கா சம்மான்: இந்த திட்டத்தின் கீழ் ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு பணியாளர்களின் மாத ஊதியத்தில் மத்திய அரசின் பங்கு இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
அதிகார் மைத்ரி: இந்த திட்டத்தின் படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் பெண்களுக்கான சட்ட உரிமை சொல்லி கொடுக்கவும், ஏதேனும் பிரச்சனை வந்தால் அதனை எதிர்கொள்ளவும் சட்ட நிபுணர் நியமனம் செய்யப்படுவார்.
சாவித்ரி பாய் ஃபுலே விடுதி: இந்த திட்டத்தின் படி நாட்டில் பணிபுரியும் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். குறைந்தது ஒரு மாவட்டத்துக்கு ஒரு தங்கும் விடுதி என்பது கட்டி கொடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த 5 முக்கிய வாக்குறுதிகள் என்பது பெண்களை மையப்படுத்தி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களின் ஓட்டுகளை ஈர்க்கும் வகையில் இந்த 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள. கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா, தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பெண்களை மையப்படுத்தி இலவச பஸ் பயணம், மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்டவற்றை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. அது அந்த 2 மாநிலங்களிலும் கைக்கொடுத்ததோடு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல் தான் வரும் லோக்சபா தேர்தலிலும் ள் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுக்கும் என பெண்களை மையப்படுத்தி 5 முக்கிய வாக்குறுதிகளை அந்த கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications