திராணி இருந்தா அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி 'தில்’ சவால்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தைரியம் இருந்தால் உத்தரப்பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதியில் மட்டும் தம்மை எதிர்த்து போட்டியிடட்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகள் நேரு குடும்பம் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்ற இடங்கள். 1952, 1957-ம் ஆண்டுகளில் நேருவின் மருமகனும் இந்திரா காந்தியின் கணவருமான ஃபெரோஸ் காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அதன் பின்னர் 1967, 1971 லோக்சபா தேர்தல்களில் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்றார். 1980-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தியே வென்றார். 2004-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வென்றவர் சோனியா காந்தி. இத்தொகுதியில் சோனியா காந்தி 50% முதல் 80% வாக்குகள் வரை பெற்றவர். ஆனால் இந்த முறை ரேபரேலியில் சோனியா காந்தி போட்டியிடவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாகிறார். இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியா மகள் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது.

அமேதியில்1980-ல் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதி. 1981 முதல் 1991 வரை இந்திராவின் இன்னொரு மகன் ராஜீவ் காந்தி எம்பியாக இருந்த தொகுதி. 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் 1996, 1999 தேர்தல்களில் அவரது மனைவி சோனியா காந்தி போட்டியிட்டு வென்றார். 2004, 2009, 2014 லோக்சபா தேர்தல்களில் சோனியா காந்தி மகன் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதி அமேதி. ஆனால் 2019- லோக்சபா தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோற்றுப் போனார். ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு அபார வெற்றியைப் பெற்றார், இந்த முறையும் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடமாட்டார் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தமது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்திய போது அமேதி தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை ராகுல் காந்தி புறக்கணித்ததே அமேதி தொகுதி மக்களை அவமதித்ததாகும். அதனால்தான் அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியை வரவேற்கவில்லை. அமேதியில் தோற்ற அச்சத்தால் சோனிய காந்தி இந்த முறை ரேபரேலியை விட்டு ஓடிவிட்டார். ராகுல் காந்திக்கு தைரியம் இருந்தால் அமேதி தொகுதியில் மட்டும் என்னை எதிர்த்து போட்டியிடுவாரா?. இவ்வாறு ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பி இருந்தார்.
ராகுல் காந்தி இந்த முறையும் கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில்தான் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் வயநாடு தொகுதியை "இந்தியா" கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு வருகிறது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டால் அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனி ராஜா வேட்பாளராக களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications