பாஜகவுக்கு ஓடிய ஜார்க்கண்ட் 'அண்ணி' சீதா சோரன்.. ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப் போட லஞ்சம் வாங்கியவர்!
டெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனர் சிபு சோரனின் மருமகளும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் இன்று இரு மகள்களுடன் பாஜகவில் இணைந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த சிபுசோரன் மகன் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சாம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

சிபு சோரனின் மூத்த மகன் மறைந்த துர்கா சோரனின் மனைவி சீதா சோரன், அவரது இரு மகள்கள் இன்று திடீரென ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டனர். இது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
யார் இந்த சீதா சோரன்?: சிபு சோரனின் 3 மகன்கள் துர்கா, ஹேமந்த், பசந்த். ஒரே மகள் அஞ்சனி. இவர்களில் 39 வயதில் துர்கா சோரன் மறைந்துவிட்டார். ஜார்க்கண்ட் தனி மாநிலப் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர் துர்கா சோரன். சிபு சோரன் ஆக்டிவ் அரசியலில் இருந்த போதே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் துர்கா சோரன். இவரது மறைவுக்குப் பின்னர்தான் ஹேமந்த் சோரன் சீனுக்கே வந்தார்.
மறைந்த துர்கா சோரனின் மனைவி சீதா சோரன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ. 3 முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். துர்கா சோரன் - சீதா சோரன் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் துர்கா சோரன் சேனை என்ற தனி அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்தனர்.
அண்மையில் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட போது முதல்வர் பதவி யாருக்கு என்ற சர்ச்சை வெடித்தது. ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவை முதல்வராக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் சீதா சோரன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்தே சாம்பாய் சோரன் புதிய முதல்வராக்கப்பட்டார். அதேநேரத்தில் சாம்பாய் சோரன் அமைச்சரவையில் சீதா சோரன் சேர்க்கப்படவும் இல்லை.
இந்த சூழ்நிலையில்தான் அண்மையில் உச்சநீதிமன்றம் அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதாவது நாடாளுமன்றம், சட்டசபையில் வாக்களிக்க- கேள்வி எழுப்ப ஒரு எம்பி அல்லது எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்பது அத்தீர்ப்பு. அத்துடன் நாடாளுமன்றம், சட்டசபையில் வாக்களிக்க- கேள்வி எழுப்ப ஒரு எம்பி அல்லது எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற முந்தைய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.
இந்த தீர்ப்புக்கு காரணமே சீதா சோரன்தான். 2012-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் வாங்கினார் சீதா சோரன் என்பது வழக்கு. இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். சீதா சோரன் தொடர்பான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் அண்மையில் இப்படியான ஒரு தீர்ப்பைக் கொடுத்தது. ஓட்டுப் போட லஞ்சம் வாங்கி சிக்கிய சீதா சோரன்தான் இப்போது பாஜகவில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications