விவிபேட்- உச்சநீதிமன்றம் கறார் உத்தரவிட்டால் வாக்குப் பதிவு இயந்திரம்+ கட்சிகளின் முகம் எக்ஸ்போஸ்?
டெல்லி: விவிபேட் (விவிபாட், ஒப்புகைச் சீட்டு) அனைத்தையும் எண்ணித்தான் ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் மட்டும் கறார் உத்தரவிட்டுவிட்டால் வாக்குப் பதிவு இயந்திரங்களை முன்வைத்து எழுகிற அத்தனை சர்ச்சைகள், சந்தேகங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்பது ஜனநாயக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
உலக நாடுகள் இன்னமும் வாக்குச் சீட்டு முறையைத்தான் பயன்படுத்துகின்றன. ஆனால் நமது நாட்டில் அதி அட்வான்ஸ் என்ற பெயரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது ஒட்டுமொத்த மக்களுக்கும் 100% நம்பிக்கை என்பது இல்லை. இதுதான் உண்மை. இந்த இயந்திரங்களில் எந்த கட்சியின் சின்னத்துக்கு வாக்களித்தாலும் ஒரே ஒரு கட்சிக்குதான் ஓட்டாக விழுகிறது என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் முறைகேடுகளால்தான் மத்தியில் வலதுசாரி கட்சியான பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இத்தகைய குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெடித்த நிலையில்தான் விவிபாட்- Voter Verifiable Paper Audit Trail எனும் ஒப்புகைச் சீட்டு முறை அறிமுகமானது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் நீங்கள் ஒருவருக்கு வாக்களித்த உடன் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை காட்டக் கூடியதுதான் இந்த ஒப்புகைச் சீட்டு. ஆனால் இந்த ஒப்புகைச் சீட்டை முழுமையாக பதிவான வாக்குகளைப் போல எண்ணுவது கிடையாது. பெயரளவுக்குதான் இப்போது வரை எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு பதிவு இயந்திர வாக்குகளையும் விவிபாட் சீட்டுகளையும் முழுமையாகவே எண்ண வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை.
இது தொடர்பான வழக்கில்தான் அதாவது ஒப்புகைச் சீட்டான விவிபாட்-களை 100% எண்ண வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதிதான் நடைபெறும். அதற்குள் உச்சநீதிமன்றம் 100% ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் ஆக வேண்டும் என உத்தரவிட்டால் பெரும் எதிர்பார்ப்பும் பல நிஜங்களும் வெளியே வந்துவிடும் என்பது ஜனநாயக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
விவிபாட் எண்ணுவது என்பது வாக்குச் சீட்டுகளை எண்ணுவதைப் போன்றதுதான். இதனால் கால தாமதமாகவே செய்யலாம். கடந்த காலங்களில் வாக்கு சீட்டுகளின் மூலம் தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிந்து கொண்டவர்கள்தான் இந்தியர்கள். அதனால் ஒன்றும் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்தியர்களுக்கு இத்தகைய நடைமுறைகள் அதீதமான பற்றுதலையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்தும். விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதன் மூலமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் மோசடியானவையா? இல்லையா? இதனை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த கட்சிகள் எவை? என்பதும் தெரிந்து விடும். வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த ஓராயிரம் கதைகளுக்கும் கிளைமாக்ஸ் தெரிந்துவிடும். எல்லோரும் காத்திருப்போம் உச்சநீதிமன்ற உத்தரவுக்காக!












Click it and Unblock the Notifications