கடைசியாக சிக்கிய டிகே சிவக்குமாரின் தம்பி.. மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்! 150யை நெருங்குதே.. லிஸ்ட்
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இருந்து கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் தம்பியான டிகே சுரேஷ் உள்பட காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து இன்று சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 150யை நெருங்கி உள்ளது.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நுழைந்து கடந்த 13ம் தேதி 2 பேர் ஸ்பிரே மற்றும் வண்ண புகையை வெளியேற்றும் குண்டுகளை வீசினர். இதனால் லோக்சபா நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மொத்தம் 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் லோக்சபா, ராஜ்யபசாவில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களின் தொடர்ந்து வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆனால் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் ராஜ்யசபா தலைரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் இதனை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து சபை அலுவலல்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் மொத்தம் 143 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு கூட்டத்தொடரில் அதிக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என்றால் அது நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் தான். இந்நிலையில் தான் இன்று லோக்சபாவில் இருந்து 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமாரின் தம்பியும், பெங்களூர் புறநகர் தொகுதி எம்பியுமான டிகே சுரேஷ், மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதியின் எம்பியான நகுல் நாத்,
சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தார் தொகுதியின் எம்பியான தீபக் பைஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களின் எண்ணிக்கை 146யை தொட்டு 150யை நெருங்கி வருகிறது என்கிறது. முன்னதாக இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முதல் விஜய் சவுக் வரை கண்டன ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் மல்லிகார்ஜூன கார்கே உள்பட பல தலைவர்கள், சஸ்பெண்ட் எம்பிக்கள் பங்கேற்ற் நிலையில் அடுத்த ஒருமணிநேரத்தில் இந்த 3 எம்பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications