அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்.. ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்.. பரபரப்பு
டெல்லி: அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், எம்.பி என்ற முறையில் டெல்லியில் ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக சாடி பேசி வந்தார்.

மோடி குறித்து பேச்சு
குறிப்பாக கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுலின் இந்த பேச்சு தொடர்பாக குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

2 ஆண்டுகள் தண்டனை
இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி அவதூறு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ராகுலுக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு வெளிவந்த மறுநாளே சூட்டோடு சூடாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்படுவதாக லோக்சபா செயலகம் உத்தரவிட்டது.

காங்கிரசார் போராட்டம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் உடனடியாக அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியும் நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காலி செய்யுமாறு நோட்டீஸ்
இந்த நிலையில், எம்.பி என்ற முறையில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு பங்களாவை காலி செய்யுமாறு லோக்சபா ஹவுசிங் கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராகுல் காந்திக்கு துக்ளக் லேனில் என்ற இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு தற்போது நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்பது விதியாகும். ராகுல் காந்தி மீதான அடுத்தடுத்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications