2024 லோக்சபா தேர்தல்: பாஜகவால் வெல்ல முடியாத 160 தொகுதிகள்.. பரபர வியூகம் வகுக்கும் ஜேபி நட்டா
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக வெல்வதற்கு போராட வேண்டிய நிலைமை இருக்கும் 160 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாம்; இந்த தொகுதிகளில் பாஜக கவுரவமான வாக்குகளைப் பெறுவதற்கு அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றது. தற்போது 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் முனைப்புடன் இருக்கிறது பாஜக.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக வெல்வதற்காக போராடக் கூடிய 160 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாம். பீகாரில் பாஜக- ஜேடியூ கூட்டணி உடைவதற்கு முன்னதாக 140 தொகுதிகள் என கணிக்கப்பட்டிருந்தனவாம். ஜேடியூ கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கை கோர்த்துவிட்டது பீகாரில். இதனால் பீகாரில் கடும் போட்டியை பாஜக எதிர்கொள்ள வேண்டியதிருக்குமாம்.
இதனையடுத்து நாளையும் மறுநாளும் பீகாரில் லோக்சபா தேர்தல் ஆலோசனைகளுக்காக முகாமிடுகிறார் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா. வட இந்திய மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட வெல்வதற்கு போராட வேண்டிய 90 தொகுதிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறதாம். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ஜேடியூ-பாஜக- லோக்ஜனசக்தி கூட்டணி அமோக வெற்றியை பீகாரில் அறுவடை செய்தது. ஆனால் இம்முறை அப்படியான நிலைமை என்பதால் பீகாரை பாஜக மேலிடம் மையமாக வைத்து காய் நகர்த்த தொடங்கி இருக்கிறதாம்.
அத்துடன் எஞ்சிய 70 தொகுதிகளை இலக்கு வைத்து ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 28, டிசம்பர் 29-ந் தேதிகளில் ஆலோசனைக் கூட்டத்தை ஜேபி நட்டா நடத்த உள்ளார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாஜகவுக்கு மிக சொற்பமான வெற்றிதான் கிடைக்கப் போகிறது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுடன் மல்லுக்கட்டியாக வேண்டிய நிலை. இதனால் தென்னிந்தியாவில் முழு வீச்சாய் போராடினால் குறைந்த கவுரவமான தொகுதிகள் கிடைக்கும் என்பதை பாஜக மேலிடம் உணர்ந்தே இருக்கிறது. இதையடுத்தே ஹைதராபாத்தில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளாராம் ஜேபி நட்டா. ஆந்திரா, தெலுங்கானாவில் காங்கிரஸ் மிக மோசமாக பலவீனமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் காங்கிரஸின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து வழிகளையும் கையில் எடுத்துள்ளது பாஜக. இம்மாநிலங்களில் பலமான கட்சிகளை உடைப்பது, ஊசலாட்டத்தில் இருக்கும் ஆளும் கட்சிகளின் பிரமுகர்களை வளைப்பது என்கிற வழக்கமான பார்முலாவை கையில் எடுப்பதுதான் பாஜகவின் வியூகமாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்படியாவது அதிமுகவை ஒருங்கிணைத்து கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் ஒரு வியூகம். மற்றொரு வியூகம் எப்படியாவது திமுக கூட்டணியை சிதறடிக்க செய்து அதில் குளிர்காய்வது என்பது. இந்த இரண்டிலுமே பாஜக தீவிரமாக இருந்தாலும் தமிழகத்தில் அக்கட்சிக்கான வெற்றி வாய்ப்பு பெரும் கேள்விக்குறிதான் என்பது யதார்த்தம். அதுவும் தமிழக பாஜகவில் இதுவரை இல்லாத வகையில் உச்சகட்ட உட்கட்சி மோதல் வெடித்திருக்கும் நிலையில் லோக்சபா தேர்தலில் மிக மோசமான பாதிப்பை அது ஏற்படுத்த சாத்தியங்கள் அதிகம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications