ஆணாதிக்க சமூகம்.. எதிர்ப்பு குரல் எரிமலையாய் வெடிக்கட்டும்.. ஹிஜாப்பால் கொதித்த பிரியங்கா சோப்ரா
டெல்லி: ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் மாஷா அமினி என்பவரை போலீசார் தாக்கிய நிலையில் அவர் இறந்தார். இதனை கண்டித்தும், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரானில் பெண்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ‛‛ஆணாதிக்க சமூகத்தில் எதிர்ப்பு குரல் எரிமலையாய் வெடிக்கட்டும்'' எனக்கூறி போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈரான்.. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இங்கு பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஹிஜாப்பை கட்டாயமாக அணிய வேண்டும்.
பொது வெளியில் ஹிஜாப் அணிய தவறினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அந்த நாட்டு அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
முன்பு மாஷா அமினி.. இப்போ ஹடிஸ் நஜாஃபி! சுட்டுக் கொன்ற ஈரான்! ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தால் பதற்றம்

இளம்பெண் இறப்பு
இந்நிலையில் தான் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறியும், தலை முடி வெளியே தெரிவதாக கூறியும் குர்திஸ்தானை சேர்ந்த 22 வயது மாஷா அமினி என்ற இளம்பெண்ணை நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார போலீசார் கடந்த மாதம் கடுமையாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினி இறந்தார். இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆகிவிட்டது. ஏற்கனவே ஹிஜாப் விதிகளை தளர்த்த பெண்கள் கோரிய நிலையில் இந்த சம்பவம் அவர்களை கொந்தளிக்க செய்தது.

போராட்டம்-75க்கும் அதிகமானவர்கள் பலி
அதாவது ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை தளர்த்த வேண்டும் எனக்கூறி பெண்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மேலும் பொது இடங்களில் ஹிஜாப்பை எரித்தும், முடிகளை வெட்டியும் பெண்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையானதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை 75-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். தற்போதும் ஆங்காங்கே தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் எதிர்ப்பு
இந்நிலையில் தான் ஈரான் பெண்களின் போராட்டத்துக்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைகள் அமைப்பு, பெண்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் நடிகர், நடிகைகள் ஆகியோர் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா பதிவு
அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மாஷா அமினியின் படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானில் பெண்கள் தலைமுடியை வெட்டி போராடும் நிலையில் அதனை குறிப்பிடும் வகையில் மாஷா அமினியின் தலை முடியில் பெண்கள் போராடுவது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் பிரியங்கா சோப்ரா இதுபற்றி கூறியுள்ளதாவது:

உயிரை பறித்த போலீசார்
ஹிஜாப் சரியாக அணியாததால் மாஷா அமினியின் வாழ்க்கையை இளம் வயதிலேயே ஈரான் போலீசார் கொடூரமாக பறித்துள்ளனர். இதற்கு உலகம் முழுவதும் பகிரங்கமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரானில் உள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டியும் மேலும் பிற வகைகளிலும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

எரிமலையாய் வெடிக்கட்டும்
நீண்ட கால கட்டாய மவுனத்தில் இருந்தவர்களிடம் இருந்து வெளிவரும் எதிர்ப்பு குரல்கள் என்பவை எரிமலையாக வெடித்துச் சிதறும். இவை தடுக்கப்படக்கூடாது. உங்களின் தைரியம், உங்களின் நோக்கத்தை கண்டு நான் வியப்படைகிறேன். ஆணாதிக்க சமூகத்துக்கு சவால் விடுத்து உரிமைக்காக போராடி உயிரை பணயம் வைப்பது என்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் நீங்கள் தைரியமாக இதனை தினமும் செய்து வருகின்றனர். இதில் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். நான் உங்களுடன் நிற்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.