விசாரணைக்கு ஆஜரான மஹூவா .. என்ன சார் கேட்குறீங்க.. பாதியிலேயே ஆவேசத்துடன் வெளியேறிதால் பரபரப்பு
டெல்லி: மக்களவையில் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்ப பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். ஆனால் ஆஜரான கொஞ்ச நேரத்திலேயே, நெறிமுறையற்ற கேள்விகள் கேட்கப்படுவதாக கூறி விசாரணையிலிருந்து வெளியேறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மஹூவா மொய்த்ரா. சமீபத்தில் இவர் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விகள் பெரிய அளவில் விவாதமானது. அதாவது இவர் மொத்தம் 61 கேள்விகளை அவையில் எழுப்பியிருக்கிறார். அதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இதுதான் பாஜக தரப்புக்கு கடும் சந்தேகத்தை எழுப்பியது. பின்னர் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், அதானி குழுமம் தொடர்பாக கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார் என்றும், இது குறித்து மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து பாஜக எம்பி வினோத் சோன்கர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.வைத்தியலிங்கம், டானிஷ் அலி, சுனிதா துக்கல், அப்ராஜித சாரங்கி, பிரனீத் கவுர், ஸ்வாமி சுமிதானந்த் ராஜ்தீப் ராய் ஆகியோர் அடங்கிய மக்களவை நெறிமுறைக்குழு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டது.
இக்குழு, புகார் அளித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் இந்த லஞ்ச விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோரிடம் கடந்த மாதம் 26ம் தேதி விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக மஹூவா, விசாரணை குழு முன்னிலையில் அக்.31ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் துர்கா பூஜை விழா உள்ளிட்ட காரணங்களால் நவம்பர் மாதம் 5ம் தேதிக்கு மேல் தான் ஆஜராகுவதாக மஹூவா கூறியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற விசாரணை குழு, ஆஜராகும் தேதியை நவம்பர் 2, அதாவது இன்று மாற்றியமைத்தது. இதனையடுத்து அவர் விசாரணை குழு முன்னிலையில் இன்று ஆஜரானார். ஆனால் ஆஜரான கொஞ்ச நேரத்திலேயே விசாரணையிலிருந்து வெளியேறிவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், விசாரணை குழுவின் தலைவர் நெறிமுறையற்ற மற்றும் தனிப்பட்ட கேள்விகளை எழுப்பியதாக குற்றம்சாட்டினார். முன்னதாக விசாரணை குழுவுக்கு கடிதம் எழுதியிருந்த அவர், தன் மீது குற்றம்சாட்டிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோரிடம் தான் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications