‛ஆபாசம்’.. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‛டீப் ஃபேக்’ வீடியோ வழக்கில் அதிரடி. முக்கிய குற்றவாளி கைது
டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து டீப் ஃபேக் வீடியோ வெளியானது. இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவிய நிலையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஷ்மிகா மந்தனா தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது.
அதாவது கருப்பு நிற உடையணிந்திருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டில் நுழைவது போல் இருக்கும் அந்த வீடியோவில் ஆபாசமான முறையில் இருந்தது. இதனால் ரசிகர்கள் ஷாக்காகினர். இந்த வீடியோவை ஒரு சிலர் உண்மை என கூற, இன்னொரு தரப்பு போலியானது என கூறினர். இதனால் இந்த வீடியோ தொடர்பான விவாதம் வலைதளங்களில் உருவானது.
இதற்கிடையே தான் அந்த வீடியோ என்பது போலியானது என்பதும், அந்த வீடியோ ‛டீப் ஃபேக்’ முறையில் உருவாக்கப்பட்டதும் தெரியவந்தது. அதாவது பிரபலமானவர்களின் முகத்தை இன்னொருவருடன் சேர்த்து வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பொறுத்தமட்டில் பிரிட்டனை சேர்ந்த இந்தியாவின் ஜாரா படேல் என்பவரின் வீடியோவை எடுத்து அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஓட்டி ‛டீப் ஃபேக்’ செய்து வெளியிட்டது தெரியவந்தது.
இந்த வீடியோ என்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதோடு ‛டீப் ஃபேக்’ வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ராஷ்மிகா மந்தனாவும் வேதனை தெரிவித்து இருந்தார். ‛‛இன்று தொழில்நுட்பம் இந்தளவுக்கு ஆபத்தான முறையில் பயன்படுத்தப்படுவதைப் பார்த்தாலே அச்சமாக உள்ளது’’ என அவர் தெரிவித்து இருந்தார். மேலும் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஐபிசி 465 (போலி), 469 (நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் 66சி (அடையாள திருட்டு), 66 இ (தனியுரிமை மீறல்) உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வீடியோவை வெளியிட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக ஆந்திராவில் ஒருவரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இருப்பினும் அவரது பெயர் உள்ளிட்ட பிற விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. இவர் தான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவரே அந்த வீடியோவை உருவாக்கினாரா? இல்லாவிட்டால் இவருக்கு பின்னணியில் வேறு யாராவது உள்ளனரா? என்பதும் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications