இந்தியா-அமெரிக்கா வரி பஞ்சாயத்துகளுக்கு.. விரைவில் தீர்வு! வெளியான குட் நியூஸ்!
டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி, பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், வரி விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க, மத்திய அரசு பேச்சுவார்த்தை குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியிருந்தது. இந்த குழு தற்போது முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு அமெரிக்க அதிகாரிகளுடனும் வணிக நிறுவனங்களுடனும் பல முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தியது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் கிரீர் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதுதான்.

இந்நிலையில், "ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அமெரிக்க அரசுடன் குழு ஆக்கபூர்வமான சந்திப்புகளை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவாக சென்றுக்கொண்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே வர்த்தக உடன்பாடு எட்டப்படும்" என குழு அப்டேட் கொடுத்திருக்கிறது. இரு தரப்பினரும் ஒப்பந்தத்தின் சாத்தியமான எல்லைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகவும், இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவு செய்ய, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குழு தெரிவித்திருக்கிறது.
கோயல் தலைமையிலான குழு, அமெரிக்க வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் சந்திப்புகளை நடத்தியது. இந்தச் சந்திப்புகள் மிகவும் நேர்மறையாக இருந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டது. அமெரிக்க வணிகத் தலைவர்கள் "இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களின் மீது நம்பிக்கை வைத்து, இந்தியாவில் தங்கள் வணிக நடவடிக்கைகளை தீவிரப்படுத்த விருப்பம் தெரிவித்தனர்" என்று குழு கூறியிருக்கிறது.
ரஷ்யா மற்றும் சீனாவுடன் சமீப காலமாக இந்தியா வர்த்தக உறவை அதிகரித்திருந்தது. இதை பார்க்க அமெரிக்கா, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இந்தியாவுக்கு வரி போட்டு விட வேண்டும் என்று யோசித்து இருந்தது. அந்த வகையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்று கூறி, இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே போட்டிருந்த வரியை 50 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஜவுளி உற்பத்தி தொடங்கி பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த பாதிப்புகளை சரி செய்யும் விதமாகவும் மீண்டும் அமெரிக்காவுடன் வர்த்தகத்தை சுமுகமாக எடுத்துச் செல்லும் விதமாகவும், மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. ஆனால் வேளாண் மற்றும் பால்வள துறைகளில் தங்கள் நாட்டு பொருட்களை அனுமதிக்க வேண்டுமென்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு இந்தியா உடன்படவில்லை. எனவே பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications