மல்லிகார்ஜூன கார்கே விலகல்.. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் ப சிதம்பரம்?.. பரபரப்பு தகவல்!
டெல்லி: தற்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கே அப்பதவியில் இருந்து விலகியுள்ளதால், அவருடைய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியானது திக் விஜய்சிங் அல்லது ப சிதம்பரத்துக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட யாருடைய அனுமதியை பெற வேண்டியதில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்தது.
இதையடுத்து முதல் நபராக சசி தரூர் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதற்காக வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ள சசி தரூர், கட்சித்தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகிக் கொண்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். வேட்பு மனுவையும் அவர் தாக்கல் செய்து விட்டார். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கே.என் திரிபாதியும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே விலகல்
இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும் என்று தெரிகிறது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கட்சித்தலைமை உறுதியாக இருப்பதால், மல்லிகார்ஜூன கார்கே தனது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என கூறப்பட்டது. அதன்படியே மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

திக் விஜய் சிங் முன்னிலை
இதனால், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாநிலங்களவையில் மூத்த உறுப்பினர்களாக உள்ள ப.சிதம்பரம் மற்றும் திக் விஜய் சிங் ஆகியோர் இதற்கான போட்டியில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த ரேசில் திக் விஜய் சிங்கே முந்துவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில், கட்சித்தலைவராக மல்லிகார்ஜூன கார்கே ஆகும் பட்சத்தில், அனைத்து பிராந்தியங்களும் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் கட்சி செயல்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த
அதாவது, ஏற்கனவே தென் இந்தியாவில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் உள்ளார். இதனால், இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் திக் விஜய் சிங்கிற்கு எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பு வழங்கலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications