வசமாய் சிக்கிய மஹுவா மொய்த்ரா? அதானி பற்றி கேள்வி கேட்க பணம் வாங்கிய புகார்.. விலகி நிற்கும் மம்தா?
டெல்லி: நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம், பரிசு பொருட்களை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது. நாடாளுமன்ற நெறிமுறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதில் இருந்து விலகி நிற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து லோக்சபா எம்பியாக உள்ளார். இவர் அடிக்கடி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், நாடாளுமன்றங்களில் அவர் பாஜகவை கடுமையாக சாடி வந்தார். குறிப்பாக அதானி விவகாரத்தில் அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில் தான் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சில நாட்களுக்கு முன்பு மஹுவா மொய்த்ரா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கும் அவர் புகார் கடிதம் எழுதினார். அதில், ‛‛லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றுள்ளார்'' என கூறியிருந்தார்.
இது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. அதோடு பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கிடையே தான் லோக்சபாவில் அதானி குறித்து கேள்வி கேட்க மஹுவா மொய்த்ரா எம்பிக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, நாடாளுமன்ற நெறிமுறை குழுவிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தால் வேகமாக புகழ் அடையலாம் என கூறினேன். அதற்கு மஹுவா மொய்த்ரா ஒப்புக்கொண்டார். அதோடு அதானி குறித்து கேள்வி கேட்டதால் விலை உயர்ந்த பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு உள்ளிட்டவற்றை மஹுவா மொய்த்ராவுக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பான விசாரணைக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் டெஹாத்ராய் ஆகியோரிடம் விசாரணை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை குழு அமைக்கவும், அவரை தகுதி நீக்கம் செய்யவும் மீண்டும் வலியுறுத்த உள்ளனர்.
இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா பிரச்சனையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகி உள்ளது. அதாவது அந்த பிரச்சனையை மஹுவா மொய்த்ராவை எதிர்கொள்வார் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில பொதுச்செயலாளர் குணால் கோஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‛‛குறிப்பிட்ட இந்த பிரச்சனையில் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் எதுவும் கூற முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு வார்த்தை கூட இதுபற்றி சொல்லாது. ஏனென்றால் எங்களிடம் எதுவும் சொல்லப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபரே பிரச்சனைக்கு விளக்கம் அளிக்கலாம். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் பதில் இல்லை. பாஜக வைக்கும் குற்றச்சாட்டுகளை கவனித்து வருகிறோம். அதுதொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறோம். ஆனால் இப்போது நாங்கள் இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை'' என்றார்.
இதன்மூலம் மஹுவா மொய்த்ரா எம்பி மீதான குற்றச்சாட்டில் அவரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாறாக இந்த பிரச்சனையை அவரே எதிர்கொண்டு தீர்த்து கொள்ளட்டும் என்ற முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது தெரியவந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications