300 சீட் போட்டியிடலாம்..மாநிலத்துக்கு என்னவோ நாங்கதான்.. அடங்கனும்.. காங்கிரஸை வெளுத்தெடுத்த மமதா!
டெல்லி: லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் என்னதான் காங்கிரஸ் கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டாலும் மாநிலங்களில் செல்வாக்குள்ள கட்சிகள்தான் "இந்தியா" கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்பதை ஏற்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, பிரதமர் வேட்பாளராக மமதா பானர்ஜி பரிந்துரைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை ஆதரித்தார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மமதா பானர்ஜி இதனை உறுதியும் செய்தார்.

மமதாவின் அட்வைஸ்: மேலும் டெல்லி "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, காங்கிரஸின் பெரியண்ணன் போக்கை கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, நாடு முழுவதும் காங்கிரஸ் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால் மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ்தான் 'இந்தியா' கூட்டணிக்கு தலைமை. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிதான் தலைமை. டெல்லி, பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மிதான் கூட்டணிக்கு தலைமை என்பதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினாராம்.
தொகுதி பங்கீடுக்கு கெடு: அத்துடன், டிசம்பர் 31-ந் தேதிக்குள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் மமதா குறிப்பிட்டாராம். ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ, ஜனவரி 2-வது வாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடித்துவிடுவோம் என கூறப்பட்டதாம்.
சமாஜ்வாதி எச்சரிக்கை: இந்தக் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், "இந்தியா" கூட்டணியில் இப்போது வரை இருக்கிறோம். ஆனால் இந்தக் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியை கொண்டுவர நினைத்தால் ஒரு நிமிடம் கூட இந்த அணியில் இருக்கமாட்டோம் என எச்சரித்திருக்கிறாராம்.
நிதிஷ் vs திமுக: முன்னதாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியில் பேசினார். இதற்கு ஆங்கில மொழியாக்கத்தை திமுக தரப்பில் கேட்டனர். ஆனால் கோபப்பட்ட நிதிஷ்குமார், இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி. அனைவரும் இந்தியை கற்க வேண்டும். ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட்டு போகும் போதே அவர்களது ஆங்கில மொழியும் போய்விட்டது என காட்டமாக கூறியிருந்தாராம். இதனை முன்வைத்து தற்போது திமுகவை பாஜக கடுமையாக விமர்சித்தும் வருகிறது. நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நிதிஷ்குமாரை ஓரம் கட்டுவதால் அந்த கோபத்தை திமுக மீது வெளிப்படுத்தினார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications