கட்சிக்குள்ளேயே அதிர்வேட்டு.. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமாவுக்கு பின்னணி என்ன?
டெல்லி: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் இன்று திடீரென தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்த பின் ராஜினாமா செய்துள்ளார் பிரேன் சிங். இதுதொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் அபாயம் உள்ள நிலையில் பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கி உள்ளார்.

இன்று காலை டெல்லிக்குச் சென்ற பிரேன் சிங் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். இதைத்தொடர்ந்து, மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை, இம்பாலில் உள்ள ராஜ்பவனில் சில எம்.எல்.ஏ.க்களுடன் சென்று அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கினார்.
மணிப்பூரில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநில சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 31 தேவை. 2022 ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்ட பாஜக 32 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி, 7 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, 6 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜேடியூ, 5 எம்எல்ஏக்களைக் கொண்ட என்பிஎப் ஆகிய கட்சிகள் ஆதரவு தந்தன. பின்னர் ஜேடியூவின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகினர். மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகளால் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 7 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது.
இந்த இரு கட்சிகளும் ஆதரவை திரும்பப் பெற்றபோதும் பாஜகவிற்கு நெருக்கடி எதுவும் இல்லை. மணிப்பூர் கலவரம் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தாலும் அவர் விலகவில்லை. இந்நிலையில், தற்போது திடீரென தனது பதவியை முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு, உச்ச நீதிமன்ற வழக்கு ஒரு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.
மணிப்பூரில் குக்கி - மெய்தி இன மக்களுக்கு இடையேயான கலவரத்தை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தூண்டியதாக குக்கி இனத்தவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரேன் சிங் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதலமைச்சர் பிரேன் சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.
மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதலமைச்சர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், அவர் முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக அழுத்தம் அதிகரித்ததால் அவர் தனது முதலமைச்சர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க இருந்தது. பிரேன் சிங்கிற்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களும் அதற்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்தச் சூழலில் தான் அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
"இதுவரை மணிப்பூர் மக்களுக்கு சேவை செய்ததை ஒரு பெருமையாக கருதுகிறேன்" என்று முதல்வர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு ஆளுநர் அவரைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அண்மையில் முதல்வர் பிரேன் சிங் அறிவித்தார். "கடந்த 2023 மே முதல் நடந்து வரும் நிகழ்வுகளுக்கு நான் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் வருத்தப்படுகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட பிறகு, 2025 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications