பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு விலகலா? டெல்லிக்கு வரவழைத்து கெஜ்ரிவால் அவசர ஆலோசனை
டெல்லி: பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் கூண்டோடு காங்கிரஸ் கட்சிக்கு தாவப் போவதாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் டெல்லிக்கு வரவழைத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. 10 ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு வெறும் 22 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி உள்ளிட்ட பலரும் படுதோல்வியை சந்தித்தனர். இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 30 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு காங்கிரஸ் கட்சிக்கு தாவப் போவதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. முதல்வர் பகவந்த் மானின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள், காங்கிரஸுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லிக்கு வரவழைத்துள்ளார் கெஜ்ரிவால். டெல்லியில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அனைவருடனும் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பஞ்சாப் மாநில சட்டசபையில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 59 இடங்கள். 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களும் அகாலிதளம் கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications