முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா? பாஜக மீது மாயாவதி திடீர் பாய்ச்சல்
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசும் முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென குற்றம் சாட்டி பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, நீண்டகாலமாக பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் இணையாமல் தனித்து செயல்படுகிறார். ஆனால் மாயாவதியின் செயல்பாடுகள் மறைமுகமாக பாஜகவுக்கு உதவுவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அண்மையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சிகளுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தால் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் என கூறியிருந்தார். அதேபோல டெல்லி சட்டசபை தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த நிலையில் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ளார் மாயாவதி. அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. அனைத்து மதங்களும் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள், அனைத்து மதங்களையும் எந்த வித வேறுபாடும் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும். ஆனால் மத விவகாரங்களில் முஸ்லிம்கள் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். இதனை நியாயப்படுத்தவே முடியாது.
மதம் சார்ந்த வழிபாடுகள், திருவிழாக்களுக்கான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது. ஆனால் அப்படி எதுவும் தற்போது நடப்பதாகவும் தெரியவில்லை.
சமூகத்தில் இயல்பாக நிலவும் அமைதி, மதநல்லிணக்கத்தை இத்தகைய பாகுபாடான நடவடிக்கைகள் சீர்குலைக்கின்றன. இது மிகப் பெரும் கவலையைத் தருகிறது. ஆகையால் மதம் சார்ந்த விவகாரங்களில் பாகுபாடுகளை மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாயாவதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications
