Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐகோர்ட்டின் ‘சூ-மோட்டோ’.. ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார் அமைச்சர் பொன்முடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, 2002ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குப்பதிவு செய்தது.

Minister Ponmudi appeal to supreme court against hc takes suo motu

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும், போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாத நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார். தான் பார்த்ததிலேயே மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்பதாலேயே, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 26ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உயர் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், பொன்முடிக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட்டிருப்பதாக கூறி, மே மாத விடுமுறையில் சிறப்பு அமர்வாக விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டபோது, அதை உயர் நீதிமன்றம் நிராகரித்தாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நான்கு நாட்களில், 172 சாட்சியங்கள், 381 ஆவணங்களை ஆய்வு செய்து, ஜூன் 28ஆம் தேதி 226 பக்கங்களை கொண்ட தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த 2 நாட்களில் நீதிபதி ஓய்வுபெற்றிருப்பதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.

குற்ற விசாரணை நடைமுறையை திரிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், வேலூருக்கு மாற்றியது, தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என்பதால், சட்டத்தின் பார்வையில் செல்லாது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி நடந்திருப்பதால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்தார்.

வழக்கை விரைந்து விசாரிக்க அனுமதி கோரிய நீதிபதியே அந்த வழக்கை விசாரிக்க கூடாது என தடைவிதித்தது கேள்விப்படாத ஒன்றாக இருப்பதாகவும், வேறொரு மாவட்டத்திற்கு வழக்கை குறிப்பின் மூலம் மாற்றுவதற்கு நிர்வாக குழு நீதிபதிகளுக்கு எங்கிருந்து அதிகாரம் வழங்கப்பட்டது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார். நீதி பரிபாலனம் தவறியதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி, இந்த வழக்கை தாமாக விசாரணைக்கு எடுக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், நிர்வாக ரீதியாக நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும், இந்த விவகாரம் தாமாக முன்வந்து ஏன் எடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக நீங்கள் அளித்த விளக்கம் இந்த விவகாரத்தில் நீங்கள் முன் கூட்டியே தீர்மானித்தது போன்று உள்ளது என்று சுட்டிகாட்டினார்.

அமைச்சர் பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விழுப்புரத்திலிருந்து வேலுருக்கு நிர்வாக உத்தரவின் மூலமாக மாற்றப்பட்டுள்ளதால் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். அந்த ஆவணங்களும் வழங்கப்பட வேண்டும் கேட்டுக்கொண்டார். மேலும் தங்களுடைய உத்தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போல் உள்ளது என்றும் சுட்டி காட்டினார். இந்த வழக்கில் இருந்து நீங்கள் விலக வேண்டுமென கூறவில்லை. அதே நேரத்தில் சட்டப்படி தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து தான் யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையின் போது பதிவுத்துறை இணைக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து, அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்தச் சூழலில், ஐகோர்ட்டில் தாமாக முன்வந்து பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+