ஞானவாபியில் கோவில் கட்டனும்! இல்லாவிட்டால் மோடியை வீழ்த்த வாரணாசியில் பிரசாரம் - சு.சாமி அறிவிப்பு
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வாரணாசியில் பிரசாரம் செய்யப்படும் என அவர் எச்சரித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர், பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சர்ச்சையானது. இந்த பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2019ல் தீர்ப்பு வழங்கியது. அப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிேஷகம் முடிந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் அருகே காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் 5 பெண்கள் மசூதி சுவரில் உள்ள இந்து கடவுள்களை வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தை நாடினர்.
இதையடுத்து வாரணாசி நீதிமன்றம் வீடியோ பதிவுடன் கூடிய தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அப்போது மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருப்பதாக இந்துக்களும், அது சிவலிங்கம் இல்லை. செயற்கை நீருற்று என இஸ்லாமியர்களும் தெரிவித்தனர். இது விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இந்த ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் மிகப்பெரிய கோவில்கள் இருந்ததற்கான எச்சங்கள் உள்ளன. மேலும் மசூதியில் பயன்படுத்தப்பட்டுள்ள தூண்கள் இந்துகோவில்களில் பயன்படுத்தப்பட்டவை என்பன உள்ளிட்ட முக்கிய விபரங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை இந்துக்கள் வரவேற்ற நிலையில் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே தான் ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதோடு 7 நாட்களுக்குப் பின்னர் ஞானவாபி மசூதி கீழ் பகுதியில் இந்துக்கள் பூஜைகளை நடத்தலாம் எனவும், இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக இஸ்லாமியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அசம்பாவித சம்பங்களை தடுக்கும் வகையில் வாரணாசி ஞானவாபி மசூதியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி இருக்கும் இடம் பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியாகும். இந்த தொகுதியில் இருந்து தான் 2014, 2019 என 2 தேர்தல்களில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமாராகி உள்ளார். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிட தயாராகி வருகிறார்.
இந்நிலையில் தான் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு முக்கிய கோரிக்கையை அவர் வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் அவரை தோற்கடிக்க பிரசாரம் செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛மோடி ஞானவாபி ஏரியாவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை விடுவித்து அங்கு மீண்டும் கோவில் கட்ட வேண்டும். மசூதிக்கு மாற்று நிலம் கொடுப்பதாகவும் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் அவரை தோற்கடிக்க பிரச்சாரம் செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications