திடீரென அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து வாழ்த்து பெற்ற மோடி! சறுக்கல் தந்த பாடமா?
டெல்லி: மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மோடி வாழ்த்துகளை பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.

இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜகவை எடுத்துக்கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியின் ஆட்சியமைக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளிடம் 17+16 என 33 தொகுதிகள் இருக்கின்றன. இதை கழித்துவிட்டால் பாஜக கூட்டணிக்கு 260 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகள் வேண்டும்.
எனவே தற்போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக அரவணைத்து செல்கிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் என்டிஏ கூட்டணியின் தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனையத்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். முன்னதாக பாஜகவின் மூத்த தலைவர்களாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது மிக முக்கியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2 தேர்தல்களில் மோடி வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது அத்வானியையும், முரளி மனோகர் ஜோஷியையும் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. முதல் முறையாக 2014ல் பாஜக வென்று மோடி பிரதமராக ஆனபோது, அத்வானிக்கும், ஜோஷிக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால் இருவரும் அப்படியே ஓரம் கட்டப்பட்டனர்.

பொதுமேடைகளில் அத்வானியை கண்டுக்கொள்ளாமல் சென்றது உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. எனவே பாஜகவின் நிகழ்வுகளுக்கும், அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கும் அத்வானியும், ஜோஷியையும் அழைப்பதை பாஜக நிறுத்திக்கொண்டது.
இப்படி இருக்கையில் தற்போது குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்று, பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி தயவோடு பாஜக ஆட்சியமைக்க முன்வந்திருக்கும் நிலையில் மோடி அத்வானியையும், ஜோஷியையும் நேரில் போய் சந்தித்து வாழ்த்து பெற்றது பேசுபொருளாகியுள்ளது. பெரும்பான்மை கிடைக்காததால், மீண்டும் கட்சிக்குள் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மூத்த தலைவர்களை மோடி சந்தித்திருக்கிறார் என்று பாஜகவினர் பேசிக்கொள்கின்றனர்.











Click it and Unblock the Notifications