மண்டேலா வரிசையில் மோடி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை! வெள்ளை மாளிகையில் டின்னர் - ஜூன் 22ல் பயணம்
டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்காவின் மிக முக்கிய நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோதும், அவருக்கு பின் டொனால்ட் டிரம்ப், தற்போது ஜோ பைடன் என மூவரின் ஆட்சி காலத்திலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நட்புணர்வோடு பழகி வருகிறார். அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற மாநாட்டிலும் ஜோ பைடன் பிரதமர் மோடி சந்தித்து பேசிக்கொண்டனர்.

மோடிக்கு அழைப்பு: இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறும், வெள்ளை மாளிகையில் நடைபெறும் இரவு விருந்திற்கு வருமாறும் அமெரிக்க அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. இதனை ஏற்று வரும் ஜூன் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதற்கு முன் ஒரு முறை அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தி இருக்கும் பிரதமர் மோடி, 2 வது முறையாக மீண்டும் அக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.
மண்டேலா வரிசையில் மோடி: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துவது என்பது மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. பல வெளிநாட்டு தலைவர்கள் இந்த கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2 முறை உரையாற்றிய தலைவர்கள் மிகவும் குறைவு. பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அந்த கூட்டத்தில் 2 முறை உரையாற்றி உள்ளார்.
அதேபோல் கறுப்பின மக்களின் போராளியும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் 2 முறை உரையாற்றி உள்ளார். இந்த தலைவர்கள் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் தற்போது இணைய உள்ளார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் உரையாற்றிய பிறகு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கும் இரவு விருந்திலும் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா கருத்து: இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், "ஒரு துடிப்பான ஜனநாயக நாடு இந்தியா. டெல்லி செல்பவர்கள் இதை உணர்ந்துகொள்ள முடியும். ஜனநாயக சக்திகளின் வலிமை மற்றும் ஆரோக்கியம் இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அமெரிக்காவுடன் பல நிலைகளில் இந்தியா வலுவான நட்புறவை கொண்டு இருக்கிறது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வர்த்தக உறவு இருக்கிறது. இந்தியா பசிபிக் குவாட் உறுப்பினராகவும், இந்தோ - பசிபிக் பாதுகாப்பு விவகாரத்தில் எங்களின் நேச சக்தியாகவும் இருந்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications