ஹாட்ரிக் வெற்றி.. ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி! ஏற்பாடுகள் தீவிரம்
டெல்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் நரேந்திர மோடி 3வது முறையாக வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பிரதமராக பதவியேற்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும், 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன. தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.
இறுதியில் பாஜக தனியாக 240 இடங்களையும் கூட்டணியுடன் 293 தொகுதிகளையும் பெற்றிருக்கிறது. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அதைவிட கூடுதல் தொகுதிகளை பாஜக பெற்றிருப்பதால், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு அவர் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மோடி மட்டும் பதவியேற்பார் என்றும், பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. பதவியேற்புக்கான பணிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் வரலாற்றை பொறுத்த அளவில், 1947 தொடங்கி 1952 வரை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தார். காங்கிரஸ் கட்சியால் அவர் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 1952 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 1957 வரை இரண்டாவது முறையும் நேரு பிரதமராக பதவி வகித்தார். இந்த காலத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.
இதற்கு அடுத்து 1957ல் நடந்த லோக்சபா தேர்தல்களிலும் நேரு வெற்றி பெற்றார். அடுத்த 5 ஆண்டு காலத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளியுறவுக் கொள்கையில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். பின்னர் 1962ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் நேரு வெற்றி பெற்றார். ஆனால், அவரது உடல்நிலை சரிவை சந்திக்க தொடங்கியது. இறுதியாக 1964ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி நேரு உயிரிழந்தார். அவர் மறையும் வரை பிரதமராகவே தொடர்ந்தார்.
இந்திரா காந்தியும் கூட 3 முறை பிரதமராக இருந்திருக்கிறார். ஆனால் நேருவை போல தொடர்ந்து இருந்ததில்லை. 1966ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவை தொடர்ந்து, 1967ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
அதன் பின்னர் 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இந்த சமயத்தில் இவர் கடும் நெருக்கடியை சந்தித்திருந்தார். 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்றது. பின்னர் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. இப்படியாக 1975ல் எமர்ஜென்சியை கொண்டு வந்தார்.
கடைசியாக 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இந்த காலத்தில் காலிஸ்தான் பிரச்னை மற்றும் இலங்கை பிரச்னை என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார். இறுதியாக 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி அவர் தனது சொந்த பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, தற்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications