போன் ஒட்டு கேட்பு வழக்கு- தேசிய பங்கு சந்தை மாஜி சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்!
தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் என்.எஸ்.இ. முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைத்தது.
டெல்லி: போன் ஒட்டு கேட்பு மூலமான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தேசிய பங்கு சந்தையான NSE முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
நாட்டின் தேசிய பங்கு சந்தையில் (NSE) கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நிர்வாக இயக்குநராக இருந்தார் சித்ரா ராமகிருஷ்ணா என்ற சித்ரா ராமகிருஷ்ணன். சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அத்துடன் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலை சாமியார் என்ற மர்ம நபரிடம் சட்டவிரோதமாக சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார் என்பதும் புகார்.

இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் இமயமலை சாமியார் என்ற மர்ம நபர், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அனுப்பிய அந்தரங்க களியாட்ட மடல்களும் அம்பலமாகியது. இதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா, அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ5 கோடி அபராதம் விதித்தது செபி. அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியத்துக்கும் ரூ5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சித்ரா ராமகிருஷ்ணா, மும்பை மாஜி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மற்றும் தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் ரவிநரேன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புதிய வழக்குப் பதிவு செய்தனர். அதாவது தேசிய பங்கு சந்தை அதிகாரிகள், பணியாளர்களின் தொலைபேசிகளை மூவரும் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டனர் என்பது சிபிஐ வழக்கு. 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பில் சித்ரா ராமகிருஷ்ணாவும் அவரது கூட்டாளிகளும் ஈடுபட்டனர் என்பது சிபிஐ வழக்கு.
ஏற்கனவே பங்கு சந்தை மோசடி வழக்கு, போன் ஒட்டு கேட்பு வழக்குகளில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைத்திருந்தது. இந்நிலையில் தற்போது தொலைபேசி ஒட்டு கேட்பு மூலமான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications