நெருங்கும் "காதலர் தினம்.." ChatGPTஐ மொய்க்கும் இளசுகள்.. அடடே இதுல இப்படியொரு வசதி இருக்கா!
சாட் ஜிபிடியில் இருக்கும் புதுவித வசதி இளசுகளை அதன் பக்கம் ஈர்த்து வருகிறது.
டெல்லி: காதலர் தினம் நெருங்கும் நிலையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் தங்களுக்குப் பிடித்த நபர்களிடம் காதலைத் தெரிவிக்கத் தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே ChatGPT தளத்தில் இருக்கும் ஒரு வசதி இளசுகளை அதன் பக்கம் ஈர்த்து வருகிறது.
இப்போது உலகின் பலரும் பிரபல ஏஐ செயலியான ChatGPTஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்போது உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் செயலியாக சாட் ஜிபிடி உள்ளது. பலரும் இந்த சாட் ஜிபிடியை பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
சாட் ஜிபிடி உலகின் முதல் ஏஐ கருவி இல்லை. இதற்கு முன்னரே பல ஏஐ கருவிகள் வந்துள்ளன. இருப்பினும், அவை பெரும்பாலும் நாம் ஒன்று கேட்டால் சம்பந்தமே இல்லாத பதிலையே கொடுத்து வந்தது. ஆனால், சாட் ஜிபிடி அவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.

சாட் ஜிபிடி
இந்த சாட் ஜிபிடி ஏஐ கருவிக்கு கடந்த 2019 வரை இருக்கும் தகவல்கள் அனைத்துமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் என்ன கேள்வி கேட்டாலும் துல்லியமாகப் பதிலளிக்கிறது. இது கூகுளை போல இருக்காது. கூகுளில் நாம் ஒன்று தேடினால்.. அது தொடர்பான செய்திகளைக் கொண்ட லிங்குகள் நமக்குக் கிடைக்கும். ஆனால், இந்த சாட் ஜிபிடி-இல் நாம் எதாவது கேள்வி கேட்டால்.. அதற்கான பதில் நேரடியாகக் கிடைக்கும். அதாவது நமது கேள்விக்கு எதிரில் இருந்து ஒரு மனிதர் பதிலளிப்பதைப் போலவே இது இருக்கும். இது மட்டுமின்றி இந்த சாட் ஜிபிடி, சட்டப்படிப்பு தேர்வு, எம்பிஏ தேர்வுகளைக் கூட பாஸ் செய்துள்ளது. அந்தளவுக்கு அறிவார்ந்த ஒரு ஏஐ-ஆக இது உருவெடுத்துள்ளது.

காதல் கடிதம்
இது மட்டுமின்றி நாம் எதாவது ஜோக் கோட்டால் ஜோக் சொல்லும்.. டிப்ஸ் கேட்டால் டிப்ஸ் தரும்... அவ்வளவு ஏன் காதல் கடிதத்தைக் கூட பக்காவாக எழுதித் தருகிறதாம். ஏஐ கருவி எழுதும் காதல் கடிதம் என்பதால் சுமாராக இருக்கும் என்று நினைக்காதீர்கள். பெரும்பாலான மனிதர்களைக் காட்டிலும் இது சூப்பராகவே காதல் கடிதத்தை எழுதுகிறது. பெரும்பாலான இந்தியர்களால் ChatGPT எழுதிய காதல் கடிதத்திற்கும் மனிதனால் எழுதப்பட்ட காதல் கடிதத்திற்கும் இடையே வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியர்கள்
மேலும், சுமார் 62 சதவீத இந்தியர்கள் இந்த காதலர் தினத்திற்கு தங்கள் காதல் கடிதங்களை எழுத ஏஐ உதவியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு உலகின் பல நாடுகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் தான் அதிகபட்ச நபர்கள் ஏஐ மூலம் காதல் கடிதம் எழுதத் திட்டமிட்டுள்ளனர். மேலும், 73 சதவீதம் பேர் டேட்டிங் தளத்தில் தங்கள் பூஸ்ட் செய்ய ஏஐ பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

கண்டுபிடிக்க முடியவில்லை
இது குறித்து மேலும் கூறுகையில், "நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் ChatGPT ஊடுருவத் தொடங்கிவிட்டது. இந்தியர்களில் 78 சதவீதம் பேரால் சாட் ஜிபிடி மூலம் எழுதப்பட்ட காதல் கடிதத்திற்கும் மனிதனால் எழுதப்பட்ட கடிதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியக் கண்டுபிடிக்க முடியவில்லை. இணையமும், ஏஐ கருவியும் காதல் மற்றும் உறவுகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய நாங்கள் 9 நாடுகளில் ஆய்வுகளை நடத்தினோம். அதில் தான் இந்த விஷயங்களைக் கண்டறிந்தோம்" என்றார்.

ஏன் முக்கியம்
இது குறித்து மெக்கேப் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்டீவ் க்ரோப்மேன் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு பிரபலமடைந்து வருவதால், இணையத்தில் நாம் ChatGPT போன்ற கருவிகளால் உருவாக்கப்பட்ட தகவல்களைப் பெறும் வாய்ப்புகளும் அதிகம். ஏஐ கருவிகள் நமக்குப் பல வகையில் பயன்படலாம். இருப்பினும், சைபர் குற்றவாளிகள் கைகளுக்கு இது சென்றால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்து மோசடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது" என்றார்.

இந்தியா
இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் வேறு சில கேள்விகளும் மக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. அதில் 76% இந்தியர்கள் போலி கணக்குகள் தங்களைத் தொடர்பு கொண்டதாக ஒப்புக் கொண்டனர். மேலும், 89 சதவீதம் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் யார் என்றே தெரியாத நபர்களுடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இது சர்வதேச அளவில் 66 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்தியாவில் அந்நியர்களுக்கு மெசேஜ் அனுப்ப பொதுவாகப் பயன்படுத்தப்படும் செயலிகளாக இன்ஸ்டாகிராம் (64 சதவீதம்) , வாட்ஸ்அப் (59 சதவீதம்) மற்றும் ஃபேஸ்புக் (51 சதவீதம்) உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications