பல்வேறு திருப்பங்கள்: இந்தியாவையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கு: விசாரணை முடிந்ததாக சிபிஐ அறிவிப்பு
டெல்லி: இந்தியாவையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டு இருந்த விசாரணையை ஒருவழியாக நிறைவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 2012ல் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து எளிமையான விளக்கத்தை பார்க்கலாம்.
ஷீனா போரா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இந்தியா முகர்ஜி என்ற பிரபல ஊடகவியலாளர். மும்பையில் வசித்து வந்த இந்திராணி முகர்ஜி சித்தார்த்தா தாஸ் என்பவருடன் காதலில் இருந்தார். 1989ல் திருமணமாகாத இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது. அவர்தான் ஷீனா. அதன்பின் அடுத்த வருடமே இவருக்கு மிக்கேல் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
ஆண் குழந்தை பிறந்த சில வாரங்களில் இந்திராணி, சித்தார்த்தா இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து இந்திராணி தனது குழந்தைகளை கவுகாத்தியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் மும்பை வந்தார். இதில் மும்பையில் தொழிலதிபர் ஒருவருடன் காதலில் இருந்த இந்திராணி சில நாட்களிலேயே பிரிந்தார்.

மீண்டும்
இதன் பின்னர் மீண்டும் சஞ்சீவ் கண்ணா என்ற தொழிலதிபருடன் காதலில் விழுந்தவர், அவரை திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு விதி என்ற பெயரில் மகள் இருக்கிறார். இதையடுத்து 2002ல் இந்திராணி முகர்ஜி மீண்டும் சஞ்சீவ் கண்ணாவை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் அதே வருடம் பீட்டர் முகர்ஜி என்ற தொழிலதிபரை மணந்து கொண்டார். இந்த பீட்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இதுதான் இந்திராணியின் திருமண பின்னணி. இதில் கடைசியாக இந்திராணி பீட்டரை திருமணம் செய்த பின், தனது முதல் தாரத்து மகள் ஷீனாவை மும்பைக்கு அழைத்து வந்தார்.

ஆனால் திருப்பம்
ஆனால் பீட்டரிடம் ஷீனாவை தனது மகள் என்று சொல்லாமல் தங்கை என்று கூறி வளர்த்து வந்தார். இதை பீட்டரும் சந்தேகிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திராணியின் கணவர் பீட்டரின் முன்னாள் மனைவியின் மகன் ராகுல் முகர்ஜி மீது ஷீனா காதலில் விழுந்து இருக்கிறார். முறைப்படி இவர்கள் அக்கா, தம்பி உறவு முறை கொண்டவர்கள். ஆனாலும் பீட்டருக்கு இது தெரியாது. இந்த காதல் செய்தியை கேட்டதும் ஷீனாவின் அம்மா இந்திராணி கொதித்து போய் இருக்கிறார். இவர்களின் காதலை பீட்டர் ஏற்றுக்கொண்டாலும் (இந்திராணி மகள்தான் ஷீனா என்று அவருக்கு தெரியாது) இந்திராணி ஏற்கவில்லை. இவர்கள் காதலை பிரிக்க இந்திராணி முயன்று வந்து இருக்கிறார்.

சிக்கல்
இப்படிப்பட்ட நிலையில்தான் ஷீனா போராவிற்கும் இந்திராணிக்கு பணம் மற்றும் சொத்து விஷயங்களில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. ஷீனாவை பயன்படுத்தி சில நிதி மோசடியை செய்ய பீட்டரும் முயன்று இருக்கிறார். இதன் காரணமாக 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் மும்பையில் கார் ஒன்றுக்குள் வைத்து ஷீனா பரிதாபமாக கொலை செய்யப்பட்டார். இந்திராணி, அவரின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, பீட்டர் முகர்ஜி, இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் ஆகியோர் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர். தவறான காதல், பண, சொத்து மோதலே கொலைக்கு காரணம். இந்த நிலையில் ஷீனாவை காணாமல் அவரின் காதலர் ராகுல் முகர்ஜி தேடி வந்து இருக்கிறார். ஷீனா அமெரிக்கா சென்றதாக இந்திராணி சொன்னதை ராகுல் நம்பவில்லை.

வழக்கு
ஏனென்றால் ஷீனாவின் பாஸ்போர்ட் ராகுலிடம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ராகுல் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீஸ் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் கதையில் டிவிஸ்ட் ஒன்று நடந்தது. வேறு ஒரு விசாரணைக்காக போலீசார் சாலையில் வாகனங்களை சோதனை செய்த போது இந்திராணியின் காரை ஓட்டி வந்த அவரின் டிரைவர் ஷியாம்வர் ராய் காரில் பலத்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆயுதங்கள் எப்படி வந்தது என்று விசாரிக்கப்பட்ட நிலையில் அவர் போலீசாரிடம் ஷீனா போரா குறித்து உளறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது ஷீனா போராவை கொன்றதை பார்த்தாக ரகசிய நபர் ஒருவர் துப்பும் கொடுக்கவே இந்திராணி போலீசாரிடம் சிக்கினார்.

உடல்
அதோடு மும்பைக்கு அருகே ராயக்காடு என்ற கிராமத்தில் எரிந்த நிலையில் உடல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உடலை பரிசோதனை செய்ததில் அது ஷீனா என்று உறுதி செய்யப்பட்டது. முதலில் இது அடையாளம் தெரியாத உடல் என்று கூறி ஓரம்கட்டப்பட்டது. சரியாக கொலை நடந்து 3 வருடங்கள் கழித்து 2015ல் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. ஷீனாவை இந்திராணி எரித்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பீட்டர், சஞ்சீவ் மற்றும் ஓட்டுனர் உடந்தையாக இருந்துள்ளனர். மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதோடு சிபிஐ இந்த விசாரணையை கையில் எடுத்தது.

ஜெயில்
இந்த வழக்கில் பீட்டர் முகர்ஜி மட்டும் பெயிலில் வெளியே வந்துவிட்டார். இந்திராணி, சஞ்சீவ், டிரைவர் ஷ்யாம்வர் எல்லோரும் சிறையில் உள்ளனர். சிறையில் இருக்கும் போதே பீட்டரும் இந்திராணியும் விவாகரத்தும் பெற்றுவிட்டனர். இந்த நிலையில்தான் தற்போது பல்வேறு முடிச்சுகள் கொண்ட இந்த வழக்கை விசாரணையை நிறைவு செய்துவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. பல்வேறு திருப்பங்கள், யோசிக்க முடியாத கோணங்கள் கொண்ட இந்த வழக்கு ஒரு வழியாக முடிந்த நிலையில் விரைவில் இதன் இறுதி தீர்ப்பு வரும். 2016ல் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து டார்க் சாக்லேட் என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications