நிர்வாணப்படுத்தி சித்ரவதை.. மணிப்பூர் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு! பரபர விசாரணை
டெல்லி: மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கிய நிலையில் அந்த மாநில போலீஸ் டிஜிபிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.

இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த 2 பழங்குடியின பெண்களை மைத்தேயி மக்கள் தான் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநிலத்தை ஆளும் பாஜக அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி, ‛‛மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் என் இதயம் வலிக்கிறது. இதயத்தில் கோபம் நிரம்பி வலிகிறது. இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகளுக்கு நடந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது'' என தெரிவித்தார்.
மேலும் மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து 2 சபைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தான் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தி்ல குறிப்பிட்டுள்ளது. அதில், ‛‛மணிப்பூரில் நடந்த சம்பவத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. மணிப்பூர் போலீஸ் இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலைக்குள் மேலும் பலர் கைது செய்யப்படலாம். இந்த விவகாரம் தொடர்பான வீடியோவை பரவாமல் தடுக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி ள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications